கோடையை சமாளிக்க திருப்பதி கோவிலில் சிறப்பு வசதி


திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வருகிறார்கள். அதுவும் பள்ளி விடுமுறை காலங்களான ஏப்ரல், மே மாதங்களில் திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் மேலும் அலைமோதும். ஆனால் கோடை வெயிலில் திருப்பதிக்கு செல்பவர்கள் சுட்டெரிக்கும் வெயிலை தாக்கு பிடிக்க முடியாமல் தத்தளிப்பர்.
கோடை வெயில் சுட்டெரிக்க தொடங்கிவிட்ட நிலையில் திருப்பதி கோவிலில் பக்தர்களின் வசதிக்காக தேவஸ்தானம் நடவடிக்கை எடுத்துள்ளது. மாட வீதிகள், அன்னதான சத்திரம் உள்ளிட்ட இடங்களில் வெப்பத்தை தடுக்க தரையில் வெள்ளை பெயிண்ட் அடிக்கப்பட்டு வருகிறது.
திருப்பதி கோவில் முழுவதும் குளுகுளு வசதி செய்யப்படுகிறது. தரிசனத்துக்காக பக்தர்கள் காத்திருக்கும் வைகுண்டம் காம்ப்ளக்சில் உள்ள 31 அறைகளிலும் ஏ.சி. வசதி செய்யப்பட்டுள்ளது.
கல்யாண மண்டபம், தங்கவாசல், ஆனந்த நிலையம் ஆகிய இடங்களிலும் 24 மணி நேரமும் ஏ.சி. வசதி செய்யப்பட்டு இருக்கிறது. ஆனந்த நிலையம் என்று அழைக்கப்படும் கற்ப கோவிலுக்குள் வெளி காற்று வராது என்பதால் கூடுதல் ஏ.சி.க்கள் பொருத்தப்பட்டுள்ளது.
மேலும் திருமலையில் பஸ் நிலையம், மாட வீதிகள், லட்டு விற்பனை மையம் உள்ளிட்ட பல இடங்களில் தண்ணீர் பந்தல் வைக்கப்பட்டுள்ளன.



Leave a Comment