திருச்செந்தூரில் மார்ச் 30ஆம் தேதி பங்குனி உத்திர திருவிழா


முருக பெருமானின் ஆறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பங்குனி உத்திர திருவிழா மார்ச் 30 ஆம் தேதி நடைபெற உள்ளது. பங்குனி திருவிழா அன்று அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 4.30 மணிக்கு விசுவரூப தீபாராதனை, 5 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடக்கிறது. அதிகாலை 5.30 மணிக்கு வள்ளி அம்பாள் தபசுக்கு எழுந்தருளுகிறார். மாலை 4.30 மணிக்கு சுவாமி குமரவிடங்க பெருமான் தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளி, மேல கோவில் பந்தல் மண்டப முகப்பிற்கு செல்கிறார். அங்கு சுவாமி குமரவிடங்க பெருமானுக்கும், வள்ளி அம்பாளுக்கும் தோள் மாலை மாற்றும் நிகழ்ச்சி நடக்கிறது. பின்னர் சுவாமி- அம்பாள் திருவீதி உலா சென்று, கோவிலை சேர்கிறார்கள். இரவு 10 மணிக்கு கோவிலில் 108 மகாதேவர்கள் சன்னதி முன்பு சுவாமி குமரவிடங்க பெருமானுக்கும், வள்ளி அம்பாளுக்கும் திருக்கல்யாணம் நடக்கிறது. திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலின் உப கோவிலான நாலுமூலைக்கிணறு குன்று மேலய்யன் சாஸ்தா கோவிலில் பங்குனி உத்திர திருவிழா நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. காலையில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடக்கிறது.



Leave a Comment