திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் திருக்கோயிலில் கமல தேர் திருவிழா


திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் திருக்கோயிலில் கமல தேர் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. ஆயிரக் கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காட்டில் உள்ள வடாரண்யேஸ்வரர் திருக்கோயிலில் பண்டையக் காலத்தில் இத்தலம் ஆலமரங்கள் நிறைந்திருந்த காடாக காட்சியளித்ததால் இப்பெயர் பெற்றது. தேவாரப் பாடல் பெற்ற தலங்களுள் இது 248-வது தலமாகும். தொண்டைமண்டல பாடல் பெற்ற தலங்களுள் இது 15-வது திருத்தலமாகும். சம்பந்தர், அப்பர், சுந்தரர், காரைக்கால் அம்மையார் ஆகியோர் இத்தலத்தைப் பாடியுள்ளனர். காரைக்கால் அம்மையார் முக்தியடைந்த திருத்தலமாகும். சிவபெருமான் நடனமாடிய பஞ்சசபைகளுள் இச்சபை இரத்தின சபையாகும். இக் கோயிலில் இன்று கமலத் தேர் திருவிழா நடைபெற்றது. தாமரை மலர் போன்ற தேரில் வண்டார் குழலி தாயார் வீற்றிருக்க கோயிலில் இருந்து புறப்பட்ட தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். முக்கிய வீதிகள் வழியாக சென்ற இத் தேர் திருவிழாவில் திருவாலங்காடு, திருத்தணி, திருவள்ளூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து ஆயிரக் கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை இழுத்து சாமி தரிசனம் செய்தனர்.



Leave a Comment