திருவானைக்காவலில் தேரோட்டம் கோலாகலம்
திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர்அகிலாண்டேஸ்வரி கோயிலில் பங்குனி தேரோட்டம் கோலாகலமாக நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். பஞ்சபூதங்களில் நீர் ஸ்தலமான திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோயிலில் நடைபெறும் பல்வேறு விழாக்களில் பங்குனிப் பெருவிழா குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு மண்டல பிரமோற்சவம் கடந்த மாதம் 25ம் தேதி பெரிய கொடியேற்றத்துடன் துவங்கியது. இதன் ஒரு பகுதியாக பங்குனித் தேர் திருவிழா கடந்த 14ம் தேதி எட்டுத்திக்கும் கொடியேற்றத்துடன் துவங்கியது. அதன்பின் சுவாமியும், அம்பாளும் தினமும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதியுலா வந்தனர். முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று கோலாகலமாக நடந்தது. தேரோட்டத்தையொட்டி ஜம்புகேஸ்வரர் சுவாமி பெரிய தேரிலும், அகிலாண்டேஸ்வரி அம்பாள் மற்றொரு தேரிலும் அதிகாலையில் எழுந்தருளினர். முன்னதாக விநாயகர், சுப்ரமணியர் சிறிய தேரோட்டம் நடந்தது. தேர்கள் தேரோடும் வீதிகளில் வலம் வந்து கோயிலை அடைந்தது. அதன் பின்னர் காலை 5.35 மணிக்கு ஜம்புகேஸ்வரர் சுவாமி தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். சுவாமி தேர் மேல உள் வீதி, வடக்கு உள் வீதி, கீழ உள் வீதி, தெற்கு உள்வீதி அடங்கிய நான்கு பிரகாரங்களில் சுற்றி வீதியுலா வந்தது. காலை 7.15 மணிக்கு சுவாமி தேர் மேல உள்வீதியும், தெற்கு உள்வீதியும் சந்திக்கும் இடத்திற்கு வந்து சேர்ந்தது. இதையடுத்து 7.15 மணிக்கு அம்மன் தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டது. அலங்கரிக்கப்பட்ட தேரில் உற்சவர் அம்பாள் வீற்றிருக்க திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து சென்றனர். அம்மன் தேருக்கு பின்னால் சண்டீகேஸ்வரர் சிறிய சப்பரத்தில் வந்து காட்சி அளித்தார். அம்மன் தேர் சுவாமி தேருக்கு பின்னால் கொண்டு வந்து நிறுத்தப்பட்டது. அதன்பின்னர் மறுபடியும் சுவாமி தேரை வடம் பிடித்து இழுத்து வர காலை 11 மணிக்கு தேர் நிலையை வந்தடைந்தது. சுவாமி தேர் நிலைக்கு வந்த பின்னர் அம்மன் தேர் காலை 11.30 மணிக்கு நிலைக்கு வந்தடைந்தது. தேரோட்டத்தின் போது யானை அகிலா தேருக்கு முன்னால் செல்ல, மேளதாளங்கள் முழங்க, வாணவேடிக்கையுடன் சுவாமியும், அம்பாளும் தேரில் வீதி உலா வந்தனர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். தமிழகத்தில் சுவாமியும், அம்பாளும் தனித்தனி பெரிய தேரில் வலம் வருவது திருவானைக்காவலில் மட்டும்தான். திருவானைக்காவல் தேரோட்டத்தின்போது 2 ஹெலிகேமராக்கள் பறந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. முதுநிலை கோயில் உற்சவங்களை வீடியோ எடுத்து அரசுக்கு அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், அதனால் கோயில் உதவி ஆணையர் ஜெயபிரியா உத்தரவின்பேரில் தேரோட்டத்தை வீடியோ எடுக்க ஹெலிகேமராக்களை பறக்க விட்டதும் தெரியவந்தது.
Leave a Comment