கோடை விடுமுறை... திருமலையில் கூடுதல் தரிசன டிக்கெட்டுகள்....


கோடை விடுமுறையை முன்னிட்டு திருமலை தேவஸ்தான இணையதளத்தில் ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் வாரத்துக்கு கூடுதலாக 17 ஆயிரம் தரிசன டிக்கெட் வெளியிடப்படுகின்றன. ஏழுமலையான் தரிசனத்தை எளிமையாக்க தேவஸ்தானம் இணையதளம் வாயிலாக ரூ. 300 விரைவு தரிசன டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதியை ஏற்படுத்தியது. இதன் மூலம் தினந்தோறும் 18 ஆயிரம் டிக்கெட் வரை முன்பதிவு செய்யப்படுகின்றன. பக்தர்கள் தங்கள் விடுமுறை நாள் மற்றும் நேரம் உள்ளிட்டவற்றை தேர்ந்தெடுத்து 90 நாள்களுக்கு முன்பாக திருமலை பயணத்தை முன்பதிவு செய்கின்றனர். இந்த தரிசன டிக்கெட் பெற்றவர்கள் 2 மணி நேரத்தில் ஏழுமலையானைத் தரிசிக்க முடிவதால் வாடகை அறைகளும் அவர்களுக்கு தேவைப்படுவதில்லை. இந்நிலையில் தேவஸ்தான இணையதளத்தில் இதுவரை தேவஸ்தானம், ஏப்ரல் மாத கோட்டாவை வெளியிடவில்லை. ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் கோடை விடுமுறை காரணமாக பக்தர்களின் வருகை அதிகம் இருக்கும். அதனால் இந்த தரிசன டிக்கெட்டின் எண்ணிக்கையை உயர்த்தி, ஒரு வாரத்துக்கு கூடுதலாக 17 ஆயிரம் டிக்கெட்டை இணைத்து இன்னும் 3 நாள்களில் ஏப்ரல், மே மாத கோட்டாக்கள் இணையதளத்தில் வெளியிடப்பட உள்ளதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.



Leave a Comment