மகா சிவராத்திரி விழா தோன்றிய திருவண்ணாமலை
மகிமை மிக்க மகா சிவராத்திரி தோன்றியது திருவண்ணாமலை தலத்தில் தான் என்பது பலருக்கும் தெரியாத ரகசியமாக உள்ளது. இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
மகிமை மிக்க இந்த மகா சிவராத்திரி தோன்றியது திருவண்ணாமலை தலத்தில் தான் என்பது பலருக்கும் தெரியாத ரகசியமாக உள்ளது. இந்த நாளில்தான் கோடி சூரிய பிரகாசத்துடன் சிவபெருமான் லிங்க வடிவில் திருவண்ணாமலையில் தோன்றினார் என்று புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன் பின்னணியில் ஒரு புராண நிகழ்வு சொல்லப்படுகிறது.
விஷ்ணுவுக்கும் பிரம்மாவுக்கும் ஒரு தடவை தம்மில் யார் பெரியவர் என்ற சண்டை ஏற்பட்டது. அவர்களது சண்டையைத் தீர்த்து வைக்குமாறு தேவர்கள் அனைவரும் சிவபெருமானிடம் முறையிட்டனர். அதை ஏற்று சிவபெருமான் மிகப்பெரிய நெருப்புப் பிழம்பாக விஷ்ணு, பிரம்மா இருவர் முன்பும் தோன்றினார். அந்த நெருப்புப் பிழம்பு மண்ணுக்கும், விண்ணுக்கும் பரவி மிகப் பிரமாண்டமாக காட்சி அளித்தது.
அந்த நெருப்புப் பிழம்பு விஷ்ணு, பிரம்மா இருவரிடமும் “எனது அடிமுடியை யார் முதலில் தொட்டு வருகிறீர்களோ, அவரே இந்த உலகின் பெரியவர் ஆவார்” என்றது. உடனே விஷ்ணு வராக (பன்றி) உருவம் எடுத்து அந்த நெருப்புப் பிழம்பின் அடியை காண்பதற்காக பூமியை துளைத்துச் சென்றார்.
பிரம்மனோ அன்னப் பறவையாக மாறி, நெருப்புப் பிழம்பின் முடியை கண்டு வருகிறேன் என்று உயரே பறந்து சென்றார். பல ஆண்டுகள், யுகங்களாக முயன்றும் விஷ்ணு, பிரம்மா இருவராலும் அந்த நெருப்புப் பிழம்பின் அடி, முடியை காண இயலவில்லை. இது ஈசனின் செயலாகத்தான் இருக்கும் என்பதை உணர்ந்த விஷ்ணு, தனது முயற்சியை கைவிட்டு திரும்பி வந்தார். அவரிடம் இருந்த ஆணவம் காணாமல் போய் விட்டது.
ஆனால் பிரம்மாவிடம் இருந்த அகந்தை மட்டும் நீங்கவில்லை. உயர பறக்க முடியாமல் சோர்வடைந்து திரும்பிக் கொண்டிருந்த பிரம்மா, ஒரு தாழம்பூவை பார்த்தார். அந்த தாழம்பூ ஈசனின் முடியில் இருந்து விழுந்து பல நூறு யுகங்களாக கீழே வந்து கொண்டிருப்பதை அறிந்தார்.
நெருப்புப் பிழம்பின் முடியை தான் கண்டதாக பொய் சொல்ல வேண்டும் என்று அந்த தாழம்பூவிடம் பிரம்மா கேட்டுக் கொண்டார். தாழம்பூவும் அதற்கு சம்மதித்தது. தரை இறங்கியதும் அந்த தாழம்பூ பொய் சாட்சி சொன்னது. அவ்வளவுதான்.... நெருப்புப் பிழம்பாக இருந்த சிவபெருமானுக்கு கோபம் பொத்துக் கொண்டு வந்தது. அந்த நெருப்புப் பிழம்பில் இருந்து சிவபெருமான் வெடித்துக் கொண்டு லிங்க வடிவில் வெளியில் வந்தார்.
விஷ்ணுவுக்கும், தேவர்களுக்கும் கேட்ட வரங்களை எல்லாம் கொடுத்த சிவபெருமான், பொய் சொன்னதற்காக பிரம்மாவுக்கு, பூமியில் கோவில் இல்லை என்றும், தாழம்பூவை பூஜைக்கு தகுதியற்ற மலராவாய் என்றும் சாபமிட்டார்.
இந்த நிகழ்ச்சி நடந்தது திருவண்ணாமலையில் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் உலகில் திருவண்ணாமலையில்தான் முதன் முதலில் அக்னி தோன்றியது என்கிறார்கள். இந்த அக்னியில் இருந்துதான் சூரியன், சந்திரன் பிரகாசங்கள் மற்றும் தீப ஒளிகள் தோன்றின என்று புராணங்களில் எழுதப்பட்டுள்ளது.
இந்த அக்னியில் இருந்து வெளியில் வந்த சிவபெருமான் “லிங்கோத்பவர்” வடிவில் காட்சிக் கொடுத்தார். இதனால் திருவண்ணாமலையில்தான் முதன் முதலில் லிங்க வழிபாடு தோன்றியது என்பது உறுதியாகிறது. மாசி மாத சிவராத்திரியன்று இந்த நிகழ்வு நடந்ததால், அது மகா சிவராத்திரி என்று சிறப்பித்துக் கூறப்படுகிறது. ஆக, மகா சிவராத்திரி விழா தோன்றிய தலமும் திருவண்ணாமலையே.
திருவண்ணாமலையில் இருந்துதான் லிங்கோத்பவர் வழிபாடும், மகா சிவராத்திரி கொண்டாட்டமும் மற்ற தலங்களுக்குப் பரவியது.
சிவபெருமானுக்குரிய முக்கிய 25 வடிவங்களில் முதலாவது அமைவது லிங்கோத்பவர் வடிவம்தான். லிங்கம் என்பது சிவ வடிவம். அந்த லிங்கத்தில் இருந்து தோன்றிய உருவம்தான் லிங்கோத்பவர். அதாவது லிங்கத்துக்கு தலை, கை, கால் முளைத்தால் கிடைக்கும் உருவம்தான் லிங்கோத்பவர்.
சிவபெருமான் முதலில் உருவம் இல்லாமல் அருவமாகத்தான் இருந்தார். ஆனால் உலக உயிர்கள் முன்பு தோன்ற நினைத்தபோது அருவுருவாகவும், பிறகு உருவமாகவும் தோன்றினார். அருவத்துக்கும், உருவத்துக்கும் இடையில் நின்றதே அருவுருவமாகும். இதுதான் திருவண்ணாமலையில் நெருப்புப் பிழம்பாக நின்ற லிங்கோத்பவர் உருவமாகும். எனவேதான் திருவண்ணாமலையில் லிங்கோத்பவர் வழிபாடு, மிக, மிக சிறப்பானதாகக் கருதப்படுகிறது.
திருவண்ணாமலை ஆலயத்தில் கருவறை கோஷ்டத்தில் மூலவருக்கு நேர் பின்புறத்தில் மேற்கு திசை நோக்கி லிங்கோத்பவர் இருப்பதை காணலாம். இந்த லிங்கோத்பவர், மும்மூர்த்திகளின் அருளையும் ஒரே திருவுருவில் வழங்கிக் கொண்டிருப்பதாக ஐதீகம்.
பொதுவாக லிங்கோத்பவரை பார்க்கும் போதெல்லாம் அவருக்கு விளக்கு ஏற்றி வைத்து வழிபட வேண்டும். மலையில் இருட்டத் தொடங்கும் நேரத்தில் இவர் சன்னதியில் விளக்கேற்றி வழிபட்டால் நமது ஆணவம், அகந்தை எல்லாம் ஓடோடி விடும்.
மகாசிவராத்திரி நாளில் தமிழகத்தில் உள்ள பெரும்பாலான சிவாலயங்களில் மூன்றாம் ஜாம பூஜையை லிங்கோத்பவருக்குரிய பூஜையாக நடத்துகிறார்கள். லிங்கத்தில் இருந்து வெளிப்பட்டு அருவுருவமாக லிங்கோத்பவர் அருள்பாவித்த காலமாக இதை சொல்கிறார்கள்.
ஆனால் திருவண்ணாமலை தலத்தில் மட்டும் மகா சிவராத்திரியின் இரண்டாம் ஜாம பூஜையை லிங்கோத்பவருக்குரிய பூஜையாக நடத்துகிறார்கள். லிங்கோத்பவர் முதன் முதலில் திருவண்ணாமலையில் தோன்றியவர் என்ற ஐதீகத்தின் அடிப்படையில் மற்ற தலங்களுக்கு முன்பாக இரண்டாம் ஜாமத்திலேயே திருவண்ணாமலையில் பூஜைகள் நடத்தப்படுவதாக ரமேஷ் குருக்கள் தெரிவித்தார்.
உலக உயிர்கள் “நான்”, “எனது” என்பன போன்ற ஆணவம், அகந்தை கொள்ளாமல், தானும் இந்தப் பிரபஞ்சத்தில் ஒரு சிறு அணுவே என்பதை உணர்ந்து புரிந்து கொள்வதே லிங்கோத்பவர் வடிவத்தின் தத்துவமாக உள்ளது. இந்த வடிவை வழிபட்டால் உடல் நலமும், மோட்ச பிராப்தமும் கிடைக்கும். எனவேதான் இந்த வழிபாட்டை, “மோட்ச பிரதாயினி” என்று சொல்கிறார்கள்.
லிங்கோத்பவர் பூஜையின்போது மட்டும் சுவாமிக்கு நெய்பூசி, வெண்ணீர் அபிஷேகம் செய்து, பிறகு கம்பளி போர்த்தி தாழம்பூ சூட்டுவார்கள். இந்த ஒரு காலத்தில் மட்டுமே சிவனுக்கு தாழம்பூ அணிவிப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
திருவண்ணாமலையில் மகா சிவராத்திரியன்று இந்த பூஜையை நேரில் பார்த்து தரிசித்தால் இரட்டிப்பு பலன்கள் கிடைக்கும். அன்றைய தினம் அதிகாலை 3 மணிக்கெல்லாம் அண்ணாமலையாருக்கு அபிஷேகம் செய்யப்படும். பிறகு தங்கக்கவசம் அலங்காரம் செய்து வழிபாடுகள் நடைபெறும். மதியம் வரை லட்சார்ச்சனை நடைபெறும்.
அன்றிரவு 4 ஜாம பூஜைகள் நடத்துவார்கள். இரவு 7 மணிக்கு முதல் ஜாம பூஜை, 11 மணிக்கு இரண்டாம் ஜாம பூஜை நள்ளிரவு 1 மணிக்கு மூன்றாம் ஜாம பூஜை, அதிகாலை 4 மணிக்கு நான்காம் ஜாம பூஜை நடத்துவார்கள்.
இதில் இரவு 11 மணி முதல் 1 மணி வரையிலான இரண்டாம் ஜாம பூஜை லிங்கோத்பவருக்கான பூஜையாக நடைபெறும். அடி, முடி காண முடியாதபடி சிவபெருமான் நெருப்புப் பிழம்பாக நின்ற நேரம் அது. எனவே இந்த நேரத்தில் லிங்கோத்பவரை வழிபாடு செய்வதும், கிரிவலம் வருவதும் மிகுந்த புண்ணியத்தைத் தரும்.
மகாசிவராத்திரி தினத்தன்று திருவண்ணாமலைக்கு வரும் பக்தர்களுக்காக இரவு முழுவதும் பன்னிரு திருமுறை இசைக் கச்சேரி நடைபெறும். ராஜகோபுரம் அருகே 108 தவில், நாதஸ்வர வித்வான்களின் கச்சேரி நடக்கும்.
கோவில் வளாகம் முழுவதும் பக்தர்கள் லட்ச தீபம் ஏற்றி வைப்பார்கள். கடந்த சுமார் 25 ஆண்டுகளாக திருவண்ணாமலையில் லட்சதீபம் ஏற்றப்பட்டு வருகிறது. மகாசிவராத்திரி தினத்தன்று லட்ச தீபத்தை பார்ப்பது கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும்.
அது மட்டுமல்ல, கிரிவலம் வரும் பக்தர்கள், மகாசிவராத்திரி தினத்தில் மட்டும் வில்வ கூடையை ஏந்தியபடி கிரிவலம் செல்வது வித்தியாசமாக இருக்கும். நெருப்பு மலையாக இருக்கும் சிவபெருமானை குளிர்ச்சிப்படுத்த பக்தர்கள் கூடை, கூடையாக வில்வம் எடுத்துச் செல்கிறார்கள் என்பது ஐதீகமாகும். சிவராத்திரி கிரிவலம் காரியசித்தி தரும் என்பார்கள்.
சிவபெருமான் நெருப்பு மலையாக உருவெடுத்தது பற்றி பக்தர்களுக்கு ஒரு சந்தேகம் எழக்கூடும். கார்த்திகை தீபத்தன்றுதானே ஈசன் நெருப்பு உருவில் தோன்றினார் என்று நினைக்கலாம்.
உண்மையில் சிவபெருமான் திருவண்ணாமலையில் இரண்டு தடவை ஜோதி ரூபமாக தன்னை வெளிப்படுத்திக் கொண்டார். மாசி மாதம் விஷ்ணு, பிரம்மாவின் ஆணவத்தையும், அகந்தையையும் விரட்ட நெருப்புப் பிழம்பாக வந்தார். கார்த்திகை மாதம் அம்பாளுக்கு தன் இடப்பாகத்தில் இடம் கொடுத்தப்போது ஜோதிச்சுடராக வந்தார். முதல் ஜோதி தரிசனத்துக்கும் இரண்டாம் ஜோதி தரிசனத்துக்கும் வித்தியாசம் உள்ளதை பக்தர்கள் புரிந்து கொள்ள வேண்டும். மாசியில் நெருப்புப் பிழம்பு, கார்த்திகையில் ஜோதி சுடர்.
சிவபெருமான் ஜோதி ரூபமாக வெளிப்பட்டதால்தான் திருவண்ணாமலை தலம், “அக்னி தலம்” என்ற சிறப்பைப் பெற்றுள்ளது. அண்ணாமலையார் சன்னதியின்அர்த்த மண்டபத்தில் சிறிது நேரம் நின்று பாருங்கள்... அனல் வீசுவதுபோல இருக்கும். வியர்த்துக் கொட்டும். திருவண்ணாமலை நெருப்புத்தலம் என்பதை உறுதிப்படுத்த இந்த உதாரணம் ஒன்றே போதும் என்கிறார் ரமேஷ்குருக்கள்.
சமீபத்தில் விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில் அணுவில் உள்ள எலக்ட்ரானுக்குள்ளும் லிங்கம் இருப்பதை கண்டுபிடித்தனர். எலக்ட்ரானுக்குள்ளும் பச்சை நிற வட்டமும, நடுவில் செந்நிறமான ஜோதி வடிவமும் இருப்பதைக் கண்டார்கள். இது திருவண்ணாமலையில் பச்சை பசேல் இயற்கை வளத்துக்கிடையே ஈசன் நெருப்புப் பிழம்பாக தோன்றியதை பிரதிபலிப்பதாக ஆன்மிக பெரியவர்கள் சொல்கிறார்கள்.
அந்த நெருப்பு மலைதான் பக்தர்கள் வழிபடுவதற்கு வசதியாக விஷ்ணு, பிரம்மா வேண்டுதலின்பேரில் சிறு லிங்கமாக மாறியது. அந்த லிங்கத்தை சுற்றியே தற்போதைய ஆலயம் உருவானது.
Leave a Comment