திருப்பதி கபிலேஸ்வரர் புலி வாகனத்தில் வீதிஉலா


திருப்பதி கபிலேஸ்வரர் கோயில் பிரமோற்சவத்தின் 6வது நாளில் புலி வாகனத்தில் சுவாமி வீதி உலா வந்தார். இதில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். திருப்பதி கபிலேஸ்வரர் சுவாமி கோயிலில் கடந்த 5ம் தேதி வருடாந்திர மகா சிவராத்திரி பிரமோற்சவம் நந்தி உருவம் வரையப்பட்ட கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. தொடர்ந்து தினந்தோறும் காலை, இரவு கபிலேஸ்வரரும், காமாட்சி அம்மன் தாயாரும் எழுந்தருளி நான்கு மாடவீதியில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர். இந்நிலையில், பிரமோற்சவத்தின் 6வது நாளில் காலை புலி வாகனத்தில் சோம கந்தமூர்த்தி அலங்காரத்தில் கபிலேஸ்வரரும், காமாட்சி அம்மன் தாயாரும் எழுந்தருளி கபிலதீர்த்தம் சாலை, அன்னாராவ் சந்திப்பு, விநாயக் நகர், ஹரே ராமா ஹரே கிருஷ்ணா கோயில், அலிபிரி பைபாஸ் சாலை வழியாக மீண்டும் கோயிலை வந்தடைந்தார். பின்னர் காலை 9 மணி முதல் 11 மணியளவில் சோமகந்தமூர்த்தி, காமாட்சி தாயாருக்கு பால், தயிர், தேன், சந்தனம், இளநீர் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து, இரவு 7 மணியளவில் கஜ வாகனத்தில் சுவாமி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில், ஏராளமாக பக்தர்கள் கலந்துகொண்டு கற்பூர ஆரத்தி எடுத்து சுவாமி தரிசனம் செய்தனர். மேலும் சுவாமி வீதி உலாவின்போது கோலாட்டம், பஜனை மற்றும் பக்தி சங்கீர்த்தனை போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றது.



Leave a Comment