திருவண்ணாமலையில் மகா சிவராத்திரி ஏற்பாடுகள் தீவிரம்....
மகா சிவராத்திரி விழா வரும் செவ்வாய்கிழமை (பிப்ரவரி 13) கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் முன்னேற்பாட்டுப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. சிவராத்திரி விழா, அன்று காலை 3.30 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மனுக்கு சிறப்பு அபிஷேக-ஆராதனைகள் நடைபெறும். தொடர்ந்து, அதிகாலை 5 மணி முதல் நண்பகல் 12 மணி வரை கோயிலில் லட்சார்ச்சனை நடைபெறும். 12.05 மணிக்கு அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மனுக்கு உச்சிகால அபிஷேகம், மாலை 5 மணிக்கு சாயரட்சை அபிஷேகம் நடைபெறும். மாலை 5 மணி முதல் கோயிலில் லட்ச தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடைபெறும். கோயில் பிரம்ம தீர்த்தக் குளத்தில் மாலையில் பெண்கள், சிறுவர்கள் லட்ச தீபம் ஏற்றி வழிபடுவர். இதுதவிர, கோயிலின் பல்வேறு இடங்களில் பக்தர்கள் தீபம் ஏற்றி தங்களது வேண்டுதலை நிறைவேற்றுவர். கோயிலின் மூன்றாம், நான்காம் பிரகாரங்களில் பெண் பக்தர்கள் உப்பு, அரிசி மாவு ஆகியவற்றைப் பயன்படுத்தி சிவபெருமானின் பல்வேறு உருவங்களை வரைந்து மகிழ்வர். இந்த உருவங்களைச் சுற்றி தீபம் ஏற்றியும் பக்தர்கள் வழிபடுவது வழக்கம்.கோயிலில் மகா சிவராத்திரி தினத்தன்று நான்கு கால அபிஷேகம் நடைபெறுவது வழக்கம். அதன்படி, செவ்வாய்க்கிழமை இரவு 9 மணிக்கு அருணாசலேஸ்வரருக்கு முதல் கால அபிஷேகமும், இரவு 11 மணிக்கு 2-ஆம் கால அபிஷேகமும், புதன்கிழமை அதிகாலை ஒரு மணிக்கு மூன்றாம் கால அபிஷேகமும், அதிகாலை 4 மணிக்கு நான்காம் கால அபிஷேகமும் நடைபெறும். கோயில் மூலவர் சன்னதிக்குப் பின்புறம் உள்ள லிங்கோத்பவருக்கு ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே தாழம்பூவை அணிவித்து சிறப்புப் பூஜைகள், அபிஷேக-ஆராதனைகள் நடத்தப்படும். அதன்படி, செவ்வாய்க்கிழமை (பிப்.13) இரவு 10 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை சிறப்பு அபிஷேக-ஆராதனைகள் நடைபெறும். சரியாக 12.05 மணிக்கு மகா தீபாராதனை நடைபெறும். மகா சிவராத்திரியையொட்டி, செவ்வாய்க்கிழமை காலை முதல் புதன்கிழமை காலை வரை கோயில் கலையரங்கில் பரதநாட்டியம், தேவாரப் பாடல்களின் இன்னிசை உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும். கோயில் ராஜகோபுரம் எதிரே திருவண்ணாமலை மாவட்ட கிரிவல நாகஸ்வரம், தவில் இசைச் சங்கம் சார்பில் 36-ஆவது ஆண்டு இசை விழா, கலைமாமணி டி.ஆர்.பிச்சாண்டி குழுவினரின் 108 நாகஸ்வர, தவில் கச்சேரி நடைபெறுகிறது.
Leave a Comment