ஸ்ரீகாளஹஸ்தி கோவிலில் மகா சிவராத்திரி பிரம்மோற்சவ விழா


ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் மகா சிவராத்திரி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் வருடாந்திர மகா சிவராத்திரி பிரம்மோற்சவ விழா 13 நாட்கள் நடக்கிறது. முன்னதாக, சிவன் கோவிலில் மூலவர்களான ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர், ஞானபிரசுனாம்பிகை தாயார், பக்த கண்ணப்பர் ஆகியோருக்குச் சிறப்புப்பூஜைகள் நடந்தன. அதைத்தொடர்ந்து உற்சவர்களான ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர், ஞானபிரசுனாம்பிகை தாயார், பக்த கண்ணப்பர் ஆகியோரை பல்லக்கில் வைத்தும், பிரம்மோற்சவ விழா கொடியை மேள தாளம் முழங்க, வாண வேடிக்கைகளுடன் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவில் அலங்கார மண்டபத்தில் இருந்து பக்த கண்ணப்பர் கோவிலான கைலாசகிரி மலைக்குப் பக்தர்கள், ஊழியர்கள் ஊர்வலமாக கொண்டு சென்றனர். அங்கு, வேத பண்டிதர்கள் வேத மந்திரங்களை முழங்க பக்த கண்ணப்பர் கோவில் கொடி மரத்தில் சிவ.. சிவ.. என்ற பக்தி கோ‌ஷம் முழங்க அர்ச்சகர்கள் கொடியேற்றினர். அதைத்தொடர்ந்து பக்த கண்ணப்பருக்கு அபிஷேக, ஆராதனை, சிறப்புப்பூஜைகள், நைவேத்தியம், தீபாராதனை ஆகியவை நடந்து முடிந்ததும், மங்கள வாத்தியங்கள் முழங்க, கைலாசகிரி மலையில் இருந்து உற்சவ மூர்த்திகளை ஊர்வலமாக ஸ்ரீகாளஹஸ்திக்குக் கொண்டு வந்தனர். சிவன் கோவிலின் நான்குமாட வீதிகளில் உற்சவ மூர்த்திகள் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.



Leave a Comment