சென்னையில் அமர்நாத் பனிலிங்கம்
பிரம்மா குமாரிகள் இயக்கத்தின் 82-வது சிவராத்திரி விழாவினை முன்னிட்டு அமர்நாத் பனிலிங்கம் மற்றும் 12 ஜோதிர்லிங்க தரிசனம் சென்னையில் நடைபெற உள்ளது. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் பிப்ரவரி 9 ஆம் தேதி முதல் 14 ஆம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பாரதத்தின் புகழ்மிக்க 12 ஜோதிர்லிங்கங்களையும், அமர்நாத்திலுள்ள பனி லிங்கத்தையும் ஒரே இடத்தில் மக்கள் தரிசிக்க சென்னை வரலாற்றில் முதன் முறையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வள்ளுவர் கோட்டத்தில் இம்முப்பெரும் ஆன்மீக நிகழ்ச்சி வருகிற பிப்ரவரி 9 முதல் 14 வரை காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை தரிசனத்திற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும். லிங்க தரிசனங்களை பார்த்த பிறகு இராஜயோக ஞான விளக்கம் படக்கண்காட்சியாகவும், வீடியோ காட்சியாகவும் காண்பிக்கப்படும். அதன் பிறகு 5 நிமிடங்கள் அமர்ந்து தியானிக்க பிரத்யேக தியான கூடமும் அமைக்கப்பட்டுள்ளது. அடுத்து ஒவ்வொரு தினமும் காலை 10.30 மணிக்கும் மாலை 4.30 மணிக்கும் தாய்மார்களுக்கான விளக்கு தியானம், திருநங்கைகளுக்கான தனி நிகழ்ச்சி, தேர்வு பயத்தை நீக்கும் வழிகள் என்னும் மாணவ மாணவிகளுக்கான நிகழ்ச்சி, தமிழ் படைப்பாளிகள், அறிஞர்களுக்கான சிறப்பு நிகழ்ச்சி, டென்ஷனுக்கு விடை கொடுப்போம் எனும் பொது நிகழ்ச்சி, அர்ச்சகர்கள், ஒதுவார்கள், உபன்யாசகர்களைக் கௌரவிக்கும் நிகழ்ச்சி, ஊடகம் மற்றும் கலைத்துறையினருக்கான நிகழ்ச்சி, ஓய்வு பெற்ற முதியோர்களுக்கான முதுமையை வெல்வோம் நிகழ்ச்சி, மனபாரமற்ற வணிகம் என்னும் தொழிலதிபர்கள் மற்றும் வியாபாரிகளுக்கான நிகழ்ச்சியென பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. அதேபோல தினமும் மாலை 6 மணியிலிருந்து கலை நிகழ்ச்சிகள் மற்றும் அஷ்ட லட்சுமி, நவதேவிகள் மற்றும் கைலாச திருக்காட்டி போன்றவைகளின் தத்ரூப காட்சிளும் நடைபெற உள்ளன. இந்த நிகழ்ச்சிகளை அனைவரும் இலவசமாக காணலாம்.
Leave a Comment