சந்திரகிரகணம்... பழனியில் தேரோட்ட நேரம் மாற்றம்


பழனியில் வரும் 31ம் தேதி காலை தைப்பூச தேரோட்டம் நடைபெறும் என பழனி தேவஸ்தான நிர்வாகம் அறிவித்துள்ளது. 60 ஆண்டுகளுக்கு பிறகு தைப்பூச திருநாளன்று சந்திர கிரகணம் வருவதையடுத்து தைப்பூச தேரோட்டத்தின் நேரம் மாற்றப்பட்டுள்ளது. பழனியில் தைப்பூசத் திருவிழா பத்து நாள்கள் கொண்டாடப்படுகிறது. தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் பழனி முருகன் கோயிலுக்கு பாத யாத்திரையாக வருகிறார்கள். இவ்வாறு பாத யாத்திரை செல்வதால் பக்தர்களுக்கு ஆன்ம பலமும், உடல் நலமும் ஒருங்கே பெருகுகிறது. மன உளைச்சல் அகன்று உள்ளத்தில் உற்சாகம் பிறக்கிறது. பழனி முருகன் கோயிலில் தைப்பூசத் திருவிழா வரும் ஜனவரி 25ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 3ஆம் தேதி வரை நடக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் ஜனவரி 30ஆம் தேதியும் தேரோட்டம் ஜனவரி 31ஆம் தேதி தைப்பூச தினத்தன்று நடக்கிறது. ஜனவரி 31ஆம் தேதி சந்திர கிரகணம் என்பதால் பூஜைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பழனி கோயிலில் மாலை 5.30 மணிக்கு நடைபெறும் சாயரட்சை பூஜை, மதியம் 2.45 முதல் 3.45 மணி வரை நடைபெறும். அதன் பிறகு கோயில் நடை அடைக்கப்படும். தைப்பூசத்தில் மாலை நேரத்தில் நடைபெறும் தேரோட்டம், சந்திரகிரகணத்தால் பகலில் நடைபெறும் என தேவஸ்தான நிர்வாகம் அறிவித்துள்ளது. சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்பும் இதேபோல தைப்பூசத்தில் சந்திரகிரகணம் வந்ததாகவும் அதனால் பகலில் தைப்பூசத் தேரோட்டம் நடந்ததாகவும் கூறப்படுகிறது.



Leave a Comment