மகரவிளக்கு பூஜை அன்று மலை ஏற தடை....
சபரிமலையில் மகரவிளக்கு பூஜை அன்று பக்தர்கள் மலையேற தடை விதிக்கப்பட்டுள்ளது. சபரிமலை அய்யப்பன் கோவிலில் வருகிற 14-ந் தேதி மகரவிளக்கு பூஜை நடைபெற உள்ளது. இதற்காக சன்னிதானத்தில் முன் ஏற்பாடுகள் தீவிரமாக செய்யப்பட்டு வருகிறது.
அன்றைய தினம் பிற்பகல் 1.47 மணிக்கு மகர சங்கிரம பூஜை தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு தலைமையில் நடைபெறும். முன்னதாக காலை 10.30 மணி வரை நெய்யபிஷேகம் நடைபெறும். தொடர்ந்து மகர சங்கிரம பூஜைக்காக கோவில் வளாகம் சுத்தம் செய்யப்படும்.மகர விளக்கு பூஜை அன்று அய்யப்பனுக்கு அணிவிக்கப்படும் திருவாபரணங்கள் பம்பையில் இருந்து ஊர்வலமாக சன்னிதானத்திற்கு எடுத்து வரப்படுவதையொட்டி அன்றைய தினம் பிற்பகல் முதல் மகர ஜோதி தரிசனம் வரை பக்தர்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அதாவது அந்த சமயத்தில் மலை ஏற தடை விதிக்கப்பட்டு உள்ளது.
ஜோதி தரிசனத்திற்கு பின் மாலை 7 மணிக்கு மேல் பக்தர்கள் மலை ஏற அனுமதிக்கப்படுவார்கள். அதே போல் உச்ச பூஜைக்கு பின் திருவாபரண வருகைக்காக பதினெட்டாம் படியை சுத்தம் செய்ய வசதியாக, திருவாபரணம் அணிவித்து மாலை 6.30 மணிக்கு சிறப்பு தீபாராதனை நடைபெறும் வரை பக்தர்கள் பதினெட்டாம் படி வழியாக ஏறவும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது. திருவாபரணங்கள் அணிவித்து நடத்தப்படும் சிறப்பு தீபாராதனைக்கு பின்பு பொன்னம்பல மேட்டில் அய்யப்பன் பக்தர்களுக்கு ஜோதி வடிவில் காட்சி தருவார்.
Leave a Comment