சபரிமலையில் ஜனவரி 14 ஆம் தேதி மகரஜோதி


மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவிலில் நடை திறக்கப்பட்டது. ஜனவரி 14 ஆம் தேதி ஜோதி தரிசனம் நடைபெறுகிறது. சபரிமலை அய்யப்பன் கோவிலில் மண்டல பூஜையை முன்னிட்டு கடந்த மாதம் 15 ஆம் தேதி நடை திறக்கப்பட்டு , பூஜைகள் நடைபெற்றன. 26 ஆம் தேதியுடன் நிறைவு பெற்ற மண்டல பூஜை வழிபாடுகளில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை தரிசனம் செய்தனர். மண்டல பூஜைக்கு பின் 26 ஆம் தேதி இரவு 11 மணிக்கு நடை அடைக்கப்பட்டது. மகர விளக்கு பூஜையை முன்னிட்டு தந்திரி கண்டாரு மகேஷ் மோகனரு முன்னிலையில் ,மேல் சாந்தி உண்ணி கிருஷ்ணன் நம்பூதிரி நடையை திறந்தார். சபரிமலையில் வருகிற 14 ஆம் தேதி பிரசித்தி பெற்ற மகர விளக்கு பூஜை மற்றும் மகர ஜோதி தரிசனம் நடைபெறும் இதை காண பக்தர்கள் கூட்டம் அலைமோதும். மகர விளக்கு பூஜையையொட்டி சுவாமி அய்யப்பனுக்கு அணிவிக்கப்படும் திருவாபரணங்கள் வருகிற 12 ஆம் தேதி பந்தளம் வலிய கோயிக்கல் கோவிலில் இருந்து ஊர்வலமாக எடுத்து வரப்படுகிறது. முன்னதாக எருமேலி பேட்டை துள்ளல் 11 ஆம் தேதி நடைபெறும். 16 ஆம் தேதி முதல் 19 ஆம் தேதிவரை இரவில் படி பூஜை நடைபெறுகிறது. 20 ஆம் தேதி பந்தளம் கொட்டாரம் ராஜ பிரதிநிதியின் தரிசனத்திற்கு பின்னர் கோவில் நடை அடைக்கப்படும் .



Leave a Comment