நடராஜர் கோவிலில் தேரோட்டம் ....
ஆருத்திரா தரிசன விழாவை முன்னிட்டு சிதம்பரம் நடராஜர் கோவில் தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு டம் பிடித்து இழுத்தனர். நடராஜர் கோவிலில் ஆண்டுதோறும் மார்கழி மாதம் ஆருத்ரா தரிசனமும், ஆனி மாதம் ஆனித் திருமஞ்சன தரிசனமும் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான மார்கழி ஆருத்ரா தரிசன உற்சவம் டிசம்பர் 24–ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதைத் தொடர்ந்து தினமும் பஞ்சமூர்த்தி சுவாமிகள் 4 மாட வீதிகளிலும் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். விழாவில் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான தேரோட்டம் நடைபெற்றது. காலை 7.30 மணியளவில் சிதம்பரம் கீழ வீதியில் உள்ள தேர்முட்டியில் நடராஜர், சிவகாமசுந்தரி , விநாயகர், முருகன் சண்டிகேசுவரர் ஆகிய 5 சாமிகளையும் அலங்கரித்து தனித்தனி தேர்களில் வைத்து சிறப்பு பூஜைகள் நடத்தினர். பின்னர் அங்கு கூடியிருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சிவ சிவ கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்றனர். விநாயகர் தேர் முன்னோக்கி செல்ல அதன்பின்னர் சுப்பிரமணியர், நடராஜர், சிவகாமசுந்தரி, சண்டிகேஸ்வரர் ஆகிய சாமிகளின் தேர்கள் சென்றன. தேர் கீழ வீதி, தெற்கு வீதி, மேல வீதி, வடக்கு வீதி வழியாக மீண்டும் கீழவீதிக்கு தேர்கள் வந்து சேர்ந்தன.
Leave a Comment