காளஹஸ்தி சிவன் கோவில் தங்க மயமாகிறது
பஞ்ச பூதத் தலங்களில் வாயு தலமாக விளங்குவது காளஹஸ்தி கோவில். இங்குள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீகாளஹஸ்தீஸ் வரர் கோவிலுக்கு தரிசனம் செய்யவும், ராகு-கேது பரிகார பூஜை செய்யவும் நாள்தோறும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகின்றனர். இக்கோவிலில் கடந்த பிப்ரவரி மாதம் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதையொட்டி அப்போது கோவில் பிரகாரத்தில் உள்ள ஞானப் பிரசுனாம்பிகை அம்மன் சந்நிதி, காளஹஸ்தீஸ்வரர் சந்நிதி, கோவில் கொடிமரங்கள் ஆகியவற்றுக்கு ரூ.16 கோடி செலவில் செப்புதகடுகள் பொருத்தப்பட்டு தங்க முலாம் பூசப்பட்டன. காளஹஸ்தியில் வருகிற பிப்ரவரி மாதம் மகா சிவராத்திரி வருடாந்திர பிரம்மோற்சவம் நடைபெறவுள்ளது. அதற்கு முன்பாக கோவிலில் உள்ள மற்ற கொடிமர பீடங்கள், பலி பீடங்கள், மண்டப தூண் வளைவுகளில் உள்ள கூம்புகள் ஆகியவற்றுக்கு செப்புத் தகடுகள் பொருத்தி தங்க முலாம் பூச அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். தற்போது அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகள் நிறைவடைந்தவுடன் காளஹஸ்தீஸ்வரர் கோவில் முழுவதுமாக தங்கமயமாகக் காட்சியளிக்கும்.
Leave a Comment