சபரிமலைக்கு 22-ந் தேதி தங்க அங்கி ஊர்வலம்


மண்டல பூஜையன்று சபரிமலை ஐயப்பன் கோவிலில் சுவாமி ஐயப்பனுக்கு அணிவிக்க தங்க அங்கி ஊர்வலம் ஆரன்முளாவில் இருந்து வருகிற 22-ந் தேதி தொடங்குகிறது. சபரிமலை ஐயப்பன் கோவிலில் இந்த ஆண்டின் மண்டல பூஜை வருகிற 26-ந் தேதி நடக்கிறது. அன்றைய தினம் மதியம் மண்டல சிறப்பு பூஜை நடைபெறும். திருவிதாங்கூர் மன்னராக இருந்த சித்திரை திருநாள் மகாராஜா சபரிமலைக்கு வழங்கிய 420 சவரன் எடையுள்ள தங்க அங்கி மண்டல பூஜையின் போது ஐயப்பனுக்கு அணிவித்து பூஜை நடத்தப்படுகிறது. இந்த தங்க அங்கி, பத்தினம்திட்டை மாவட்டம் ஆரன்முளா பார்த்தசாரதி கோவிலில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இந்த தங்க அங்கி டிசம்பர் 22-ந் தேதி காலை 7 மணிக்கு ஆரன்முளா பார்த்த சாரதி கோவிலில் நடைபெறும் சிறப்பு பூஜைகளுக்கு பிறகு, அலங்கரிக்கப்பட்ட பல்லக்கு வாகனத்தில் வைத்து துப்பாக்கி ஏந்திய போலீசாரின் பலத்த பாதுகாப்புடன் ஊர்வலமாக சபரிமலைக்கு கொண்டு வரப்படுகிறது. இந்த ஊர்வலம் 22-ந் தேதி இரவு ஓமல்லூரிலும், 23-ந் தேதி இரவு கோண்ணியிலும், 24-ந் தேதி பெரிநாட்டிலும் தங்குகிறது. 25-ந் தேதி மதியம் பம்பை கணபதி கோவில் வந்து சேரும். அங்கிருந்து மேளதாளம் முழங்க பக்தர்களின் தலைச்சுமையாக தங்க அங்கி சன்னிதானத்திற்கு கொண்டு செல்லப்படும்.



Leave a Comment