அரங்கனின் திருவடிகளை சிறப்பிக்கும் பாதுகையின் மகிமை!
ஸ்வாமி நிகமாந்த மகாதேசிகனின் கிரந்தங்கள் பல உண்டு. அவற்றில் தலைசிறந்தது பாதுகா ஸகஸ்ரம். 32 பத்ததிகளையும் 1008 ஸ்லோகங்களையும் கொண்ட இந்த பொக்கிஷம், ஒரே இரவில், ஒரு ஜாமத்தில் அருளப்பட்டதாம்.
வைணவ சமயத்துக்கு ஓர் அரிய பொக்கிஷம் ஸ்வாமி வேதாந்த தேசிகர். இவர், காஞ்சிபுரத்துக்கு அருகிலுள்ள தூப்புல் எனும் சிறிய கிராமத்தில் புரட்டாசியில், திருவோண நட்சத்திரத்தில், திருவேங்கடவனின் திருமணியின் அம்சமாக திருஅவதாரம் செய்தார்.
திருக்கோயிலின் மணி எங்கெங்கும் சங்கநாதம் ஒலிப்பது போல், ஸ்வாமி தேசிகரின் படைப்புகள் பாரெங்கும் அறம் பரப்பி ஒளிவீசித் திகழ்வதாகும். இவரின் 750-வது திருநட்சத்திர வைபவம் நம் தேசத்தில் மட்டுமின்றில் லண்டனிலுள்ள House of common சபையிலும் கொண்டாடப்படுகிறது.
ஸ்வாமி நிகமாந்த மகாதேசிகனின் கிரந்தங்கள் பல உண்டு. அவற்றில் தலைசிறந்தது பாதுகா ஸகஸ்ரம். 32 பத்ததிகளையும் 1008 ஸ்லோகங்களையும் கொண்ட இந்த பொக்கிஷம், ஒரே இரவில், ஒரு ஜாமத்தில் அருளப்பட்டதாம். அரங்கனின் திருவடிகளைப் (பாதுகை) பற்றி சிறப்பிப்பதாகத் திகழும் இந்த நூல், ஸ்வாமி நம்மாழ்வாரைப் பற்றிய ஸ்தோத்திர ரூபமான நூலாகவும் திகழ்கிறது. சம்ஸ்கிருதத்தில் அருளப்பட்ட இந்நூலை தமிழில் உரைநடைப்படுத்தி, அதன் மேன்மையை விளக்கியுள்ளனர், வைணவ மத பூர்வாச்சார்யார்கள்.
இதில் 30-வதாகத் திகழும் ‘சித்ரப்பத்ததி’ என்பது, கணித மேதைகளும் வியக்கும் வண்ணம் எழுதப்பட்டுள்ளது. இதன் நடை ஆஸுகவி, விஸ்தாரக்கவி, விகடகவி, சித்திரக்கவி என நான்கு வகையாகப் பிரித்தருளப் பட்டுள்ளது. திருமங்கையாழ்வாரை 'நாலுகவி பெருமாள்’ என்று சிறப்பிப்பார்கள். அதுபோன்று, ஸ்வாமி தேசிகனும் இந்த நான்கு நடையினையும் தமது கவிதைத் தொகுப்பில் பிரயோகித்துள்ளார்.
ஆஸுகவி என்பது, மேலிருந்து கீழும் கீழிருந்து மேலும் பாட்டைப் படிக்கையில் வேறு அர்த்தங்களைப் புகட்டும்.
உதாரணமாக சொல்வதானால் லக்ஷ்மி சகஸ்ரம் எழுதிய அரசாணிப்பாளை வேங்கடாத்ரி என்ற கவி, தமது நூல் ஒன்றை மேலிருந்து கீழாகப் படித்தால் ராமாயணத்தையும், கீழிருந்து மேலாகப் படித்தால் மகாபாரதம் படிப்பது போன்றும் அருளியிருப்பார்.
இதைப் போலவே ஸ்வாமி தேசிகன் ஒரு செய்யுளின் இடையில், 'காது பாஸ்ய ஸதாலோக’ என்ற வரியை அமைத்திருப்பார். இதைத் திருப்பிப் படித்தால்... அதாவது ‘காலோ தாஸஸ்ய பாதுகா’ என்று வரும்.இதைப்போன்றே இப்பாதுகா ஸஹஸ்ரத்தில், சம்ஸ்கிருதத்தில் வரையறுக்கப்பட்ட பல நடையுக்திகளைப் பயன்படுத்தி, அதை விஸ்தார கவியாக அழகுபடுத்தியுள்ளார்.
மேலும், நகைச்சுவை, சிலேடை, ஹாஸ்யம் ஆகியவற்றையும் தமது பல நூல்களில் கையாண் டுள்ளார் ஸ்வாமி தேசிகன். அவ்வகையில் இந்த நூலில், ஸ்வாமி நம்மாழ்வாரின் சிறப்பினைச் சிலேடையாக எல்லா ஸ்லோகத்திலும் படைத்துள்ளார்.
சித்திர வடிவில் வடிக்கப்படுவது சித்ரகவியாகும். திருமங்கை ஆழ்வார் குடந்தை சார்ங்கபாணியைக் குறித்து இப்படியான கவியை அருளியுள்ளார். இதனைச் சார்ங்கனின் திருச்சந்நிதி சுவரில் காணலாம். ஸ்வாமி தேசிகனும், தனது பாதுகா ஸஹஸ்ரத்தில் 30 ஆவது பத்தியான ‘சித்திரப் பத்ததியில்’ யந்திர வடிவில் சதுர தளமாகவும், அஷ்ட தளமாகவும், ஷோடஸ தள வடிவமாகவும், சக்ரபந்தமாகவும் பல வடிவங்களில் ஸ்லோகங்களை அமைத்துள்ளார்.
தெய்வாம்சம் பொருந்திய இந்த ஸ்லோகங்களை உள்ளச் சுத்தியுடன் பாராயணம் செய்துவந்தால், வேண்டிய பலன்கள் வேண்டியபடி கிடைப்பது நிச்சயம்.
Leave a Comment