சொந்த வீடு அமைய முருகனுக்கு வெற்றிலை தீப வழிபாடு!


சொந்த வீடு கட்ட வேண்டும், நிலம் வாங்க வேண்டும் என்கிற ஆசை யாருக்கு தான் இல்லை. அதற்கான வைராக்கியத்துடன் இருந்தால் செவ்வாய்க்கிழமை தோறும் முருகனுக்கு இப்படி வெற்றிலையில் தீபம் ஏற்றி வாருங்கள்! நிச்சயம் அதற்குரிய பலனை நீங்கள் அனுபவிப்பீர்கள். வீடு கட்ட நினைத்தால் மட்டும் போதாது, அதற்குரிய ஏற்பாடுகளையும் செய்து கொண்டே வர வேண்டும்.

அப்படி செய்து வருபவர்கள் செவ்வாய்க்கிழமை தோறும் வீடு முழுவதையும் சுத்தம் செய்து, பூஜை அறையில் முருகப் பெருமானுக்கு ஒரு மனையை அமைத்து அதில் மஞ்சள் தெளித்து, கோலமிட்டு கொள்ளுங்கள். அதில் முருகப் பெருமான் அல்லது சிலை வைத்து அலங்காரம் செய்து கொள்ளுங்கள்.

சஷ்டி திதியில் முதன் முதலாக உங்கள் செலவில் ஒரு செங்கல்லை மட்டும் வாங்கி வந்து வீட்டில் வையுங்கள். இந்த பூஜையின் பொழுது மஞ்சள், குங்குமம் இட்டு முருகனுக்கு அருகில் அந்த செங்கல்லை வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் ஆறு விளக்குகளில் நெய் அல்லது நல்லெண்ணெய் ஊற்றி புது திரி போட்டு கொள்ளுங்கள். ஒவ்வொரு விளக்கையும் ஒவ்வொரு வெற்றிலையில் வைக்க வேண்டும். பரிகாரத்திற்கு பயன்படுத்தும் வெற்றிலை நுனி மற்றும் காம்பு உடைந்து இருக்கக் கூடாது.

கந்த சஷ்டி கவசம், முருகன் ஸ்தோத்திரங்கள், சண்முக கவசம் போன்ற முருகனுடைய அருளைப் பெறுவதற்கு உரிய ஸ்லோகங்களை வாசிக்க வேண்டும். பின்னர் தீபத்தை ஏற்றி, தூப, தீப ஆரத்தி காண்பிக்க வேண்டும். நிவேதனத்திற்கு சர்க்கரைப் பொங்கல், பாயாசம், வடை, சுண்டல் அல்லது தனக்கு விருப்பமுள்ள எந்த பிரசாதத்தையும் செய்து வைக்கலாம்.

உங்கள் வேண்டுதல் நிறைவேறும் பொழுது நீங்கள் வீட்டில் வைத்திருக்கும் இந்த செங்கல்லை கொண்டு முதன் முதலில் அஸ்திவாரம் அமைக்கப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். முருகனை நினைத்து ஒவ்வொரு செவ்வாய் தோறும் இப்படி முருக வழிபாடு செய்து வர நிச்சயம் உங்களுக்கும் சொந்த வீடு அமையும்.
 



Leave a Comment