பழனியில் கந்த சஷ்டி திருவிழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்கார நிகழ்ச்சி...


பழனியில் கந்த சஷ்டி திருவிழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்கார நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு முருகனை வழிபட்டனர்.

 அறுபடைவீடுகளில் மூன்றும் படை வீடான பழனியில் கந்தசஷ்டி திருவிழா கடந்த 2ம்தேதி காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது. கந்தசஷ்டி  திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் இன்று மாலை நடைபெற்றது. பிற்பகல் நேரத்தில் மலைக்கோவிலில் இருந்து கீழே இறங்கிய முத்துக்குமாரசாமி,  மலைக்கொழுந்து அம்மனிடம் சக்திவேல் வாங்கிவந்தார்.

தொடர்ந்து வீரபாகு, நவவீரர்கள் உள்ளிட்ட வீரர்கள் படை சூழ வடக்கு கிரிவீதியில் தாரகா சூரனையும், கிழக்கு கிரிவீதியில் பானுகோபனையும், தெற்கு கிரிவீதியில் சிங்கமுகா சூரனையும், மேற்கு கிரிவீதியில் சூரபத்மனையும் முருகன் சக்திவேல் கொண்டு வதம் செய்தார். சூரசம்ஹார நிகழ்சசியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சரணகோஷம் முழங்க சாமி தரிசனம் செய்தனர்.  

300க்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். சூரர்களை சம்ஹாரம் செய்த நிலையில் நாளை சண்முகர் -வள்ளி, தெய்வயானைக்கு திருக்கல்யாணம் வைபவத்துடன் கந்தசஷ்டி திருவிழா நிறைவடைகிறது.இந்நிகழ்ச்சியில் உணவு மற்றும் உணவுப் பொருட்கள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி , பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐ. பி செந்தில்குமார் கலந்து கொண்டனர். திருவிழாவிற்கான ஏற்பாடுகளை திருக்கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.



Leave a Comment