உலக பிரசித்திபெற்ற ஆழித்தேரோடும் வீதியில் நடைபெற்ற சூரசம்ஹார விழா...


சைவ சமயத்தின் தலைமைபீடமாக விளங்கும் திருவாரூர் ஸ்ரீதியாகராஜ சுவாமி ஆலய உபகோவிலில் நடைபெற்ற சூரசம்ஹார விழா: உலக பிரசித்திபெற்ற ஆழித்தேரோடும் வீதியில் நடைபெற்ற இவ்விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு…

சைவ சமயத்தின் தலைமைபீடமாக விளங்கும் திருவாரூர் ஸ்ரீதியாகராஜ சுவாமி ஆலயத்தின் உபகோவில்களில் ஒன்றான ஆலயத்தின் வடக்குபகுதியில் எழுந்தருளியுள்ள ஸ்ரீபாலசுப்பிரமணிய சுவாமி ஆலயத்தில் நடைபெற்ற சூரசம்ஹார விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.

இவ்வாலயத்தில் கடந்த  2ம் தேதி முதல் நடைபெற்று வரும் கந்தசஷ்டி விழாவின் சிறப்பு நிகழ்வான சூரசம்ஹார விழா உலக பிரசித்திபெற்ற ஆழித்தேரோடும் திருவாரூர் வடக்குராஜ வீதியில் விமர்சையாக நடைபெற்றது.

இவ்விழாவில் சூரபத்மன் பல்வேறு உருவங்களில் அதாவது கஜமுகாசுரனாகவும், சிங்கமுகாசுரனாகவும், சூரபத்மனாகவும் ஸ்ரீமுருகப்பெருமானை எதிர்கொண்டு போரிட்டபோது ஆட்டுகிடா வாகனத்தில் எழுந்தருளிய ஸ்ரீமுருகப்பெருமான் தன்னிடம் உள்ள வெற்றிவேலைக்கொண்டு சூரபத்மன் தலையை கொய்து  வதம் செய்தார்.

பிரசித்திபெற்ற இச்சூரசம்ஹார விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு முருகனுக்கு அரோகரா அரோகரா என பக்தி பரவச கோஷத்துடன் முருகப்பெருமானை மனமுருக வழிபட்டனர். இதனை தொடர்ந்து சஷ்டி விரதம் மேற்கொண்ட பக்தர்கள் ஸ்ரீமுருகப்பெருமான் சன்னதியில் மண்டியிட்டு பிரகாரத்தினை வலம்வந்து 6 நாள் சஷ்டி விரதத்தை நிறைவுசெய்தனர். இவ்விழாவில் கார்த்திகை வழிபாட்டுச்ங்க நிர்வாகிகள் ராஜ்குமார், சௌரிராஜன் உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்துகொண்டு முருகப்பெருமானை வழிபட்டனர்.



Leave a Comment