சர்வ அலங்காரத்தில் ஆட்டுகிடா வாகனத்தில் பழமுதிர் சோலை முருகன்....
பழமுதிர் சோலை முருகன் கோவிலில் கோலாகலமாக நடைபெற்று வரும் கந்த சஷ்டி விழா: நான்காவது நாள் விழாவாக சர்வ அலங்காரத்தில் ஆட்டுகிடா வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந்த சுவாமியை திரளான பக்தர்கள் அரோகரா கோஷத்துடன் வழிபாடு...
மதுரை மாவட்டம் மேலூர் அருகே பிரசித்திபெற்ற அழகர்மலை உச்சியில், முருகப்பெருமானின் ஆறாவது படை வீடு எனும் சோலைமலை முருகன் கோவிலில், ஐப்பசி மாதம் நடைபெறக்கூடிய சஷ்டி விழா கடந்த 02ஆம் தேதி காப்புகட்டுதலுடன் தொடங்கி நடைபெற்று வருகின்றது.
இதனைத்தொடர்ந்து, சுவாமிக்கு தினமும் பல்வேறு வாசனை திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனையும், தொடர்ந்து சுவாமி பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கும் நிகழ்ச்சியும் நடைப்பெற்று வருகின்றது.
இந்நிலையில், நான்காம் நாள் நிகழ்ச்சியாக இன்று. சோலைமலை மண்டபத்தில் சமேதராக உள்ள சுவாமிக்கு பால், பன்னீர், சந்தனம், விபூதி உள்ளிட்ட பல்வேறு அபிஷேகமும், தொடர்ந்து அலங்கார தீபாராதனையும் நடைபெற்றது.
இதனையடுத்து ஆட்டுக்கிடா வாகனத்தில் சுவாமி எழுந்தருளப்பட்டு, திருக்கோவிலைச் சுற்றியுள்ள மண்டப வீதிகளில், சிவ வாத்தியங்கள் முழங்க வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
இதனையடுத்து நாளை 5ஆம் நாள் நிகழ்ச்சியாக சண்முகா அர்ச்சனையும், சப்பர வீதி உலா நிகழ்ச்சியும், தொடர்ந்து 6ஆம் நாள் நிகழ்ச்சியாக விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹார நிகழ்ச்சி வரும் வியாழக்கிழமை மாலை 05.00 மணியளவில், திருக்கோவில் அருகேயுள்ள நாவல்மரத்தடி விநாயகர் கோவில் முன்பு நடைபெற உள்ளது.
இதனையடுத்து வரும் வெள்ளிக்கிழமை 07ஆம் நாள் விழாவாக திருக்கல்யாண உற்சவமும், தொடர்ந்து அன்று மாலை மஞ்சள் நீராட்டு விழாவுடன் சஷ்டி விழா நிறைவடைய உள்ளதையடுத்து. விழாவிற்கான ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் வெங்கடாசலம், அறநிலைய துறை இணை ஆணையர் செல்லத்துரை மற்றும் அறங்காவலர்கள், கண்காணிப்பாளர்கள், முருகன் திருகோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
Leave a Comment