காஞ்சி அருள்மிகு நகரீஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழா....
காஞ்சிபுரத்தில் உள்ள அருள்மிகு நகரீஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. அதிகாலை நேரத்திலேயே பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
கோவில் நகரம் என போற்றப்படும் காஞ்சிபுரத்தில் உள்ள 108 சிவாலயங்களில் ஒன்றாக காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தின் பின்புறம் அமைந்துள்ளது அருள்மிகு நகரீஸ்வரர் திருக்கோவில். பழமையான இக்கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்று பல ஆண்டுகள் ஆன நிலையில், நன்கொடையாளர்கள், உபயதாரர்கள், பங்களிப்புடன்பல லட்சம் ரூபாய் செலவில் பழமை மாறாமல் நகரீஸ்வரர் திருக்கோவில் புணரமைக்கப்பட்டு மகாகும்பாபிஷேக விழா இன்று நடைபெற்றது.
மகாகும்பாபிஷேக விழாவை முன்னிட்டு யாகசாலை பூஜைகள் நடத்தப்பட்டு பல்வேறு புண்ணிய நதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீர் கலசங்களுக்கு சிறப்பு பூஜைகள் செய்து மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக கோவில் கோபுரத்திற்கு கொண்டுவரப்பட்டது. கோவில் கோபுரத்தில் உள்ள கலசத்திற்கு சிறப்பு பூஜை செய்து சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்களை ஒலிக்க, அதிர்வெட்டுக்கள் முழங்க, கலசத்திலிருந்து புனித நீரை ஊற்றி கும்பாபிஷேக விழாவை நடத்தி வைத்தனர்.
பின்னர் கோவில் கருவறையில் உள்ள நகரீஸ்வரருக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்து பக்தர்களுக்கு காட்சியளிக்க வைத்தனர். அதிகாலை நேரத்திலேயே நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில் காஞ்சிபுரம் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளைச் சார்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்து வணங்கி வழிபட்டு சென்றனர். கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு புனித நீர் தெளிக்கப்பட்டு அன்னதானங்களும் வழங்கப்பட்டது.
Leave a Comment