பிடாரி அழகு நாச்சியம்மன் திருக்கோயில் பெரிய தூக்கு தேரோட்டம்...


கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரத்தில் 21 ஆண்டுகளுக்கு பிறகு பிடாரி அழகு நாச்சியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு பெரிய தூக்கு தேரோட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. 300க்கும் மேற்பட்ட இளைஞர்கள் தேரினை சுமந்து முக்கிய வீதிகள் வலம் வந்தனர். கரூர் மாவட்டம் குளித்தலை அருகே கிருஷ்ணராயபுரத்தில் பிடாரி அழகு நாச்சியம்மன் குருநாதன் கோவில் அமைந்துள்ளது.

எட்டுப்பட்டி ஊர் மக்களுக்கும் காவல் தெய்வமான இக்கோவிலில் 21 ஆண்டுகளுக்கு ஒரு முறை திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு 21 ஆண்டுகளுக்கு பிறகு திருவிழா நடைபெறுவதை ஒட்டி கடந்த ஆகஸ்ட் 28-ஆம் தேதி காப்பு கட்டுதலுடன் துவங்கியது. அதனைத் தொடர்ந்து தினம் தோறும் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் திருவீதி உலா கண்டார்.

இத்திருவிழாவின் முக்கிய நிகழ்வான பெரிய தூக்கு தேரோட்ட நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. முன்னதாக அம்மனுக்கு பல்வேறு வகையான அபிஷேகங்கள் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இன்று சிறப்பு அலங்காரத்தில் அம்மன் தூக்கு தேரில் எழுந்தருளினார். பின்னர் அம்மன் எழுந்தருளிய தூக்கு தேரினை 300க்கும் மேற்பட்ட இளைஞர்கள் தங்கள் தோளில் சுமந்து கிருஷ்ணராயபுரத்தின் முக்கிய வீதிகள் வழியாக மேளதாளங்கள் முழங்க வலம் வந்தனர்.

வழி நெடுங்கிலும் பொதுமக்கள், பக்தர்கள் தேங்காய் பழம் உடைத்தும்,  அர்ச்சனை செய்தும் வழிபட்டனர்.



Leave a Comment