பெருமாள் கோவில்களில் எவ்வாறு வழிபட வேண்டும்?


 

பெருமாள் கோவிலில் நுழைந்தவுடன் நமது கண்களில் பிரம்மாண்டமாக தெரிவது ராஜகோபுரம். அதனைத் தெய்வ வடிவமாக எண்ணி வணங்கி விட்டுத்தான் கோவிலுக்குள் நுழைய வேண்டும். கோவிலுக்கு வரமுடியாதவர்கள் கூட தூரத்தில் இருந்தபடியே கோபுரத்தை தரிசனம் செய்தால் இறைவனை வணங்குவதற்கு சமமாகும்.

கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்கிறார்கள். கோவிலின் உள்ளே நுழைந்தவுடன் தெரிவது பலிபீடம் ஆகும். அதனருகில் சென்று கீழே விழுந்து நமது உடலில் உள்ள கோபம், பேராசை, பற்று, அகங்காரம் ஆகியவற்றை அந்த இடத்தில் பலி கொடுத்து விட்டு இறைவனை வணங்க செல்ல வேண்டும். அடுத்து இருப்பது துவஜஸ்தம்பம் அல்லது கொடிக்கம்பமாகும். இந்த கொடிக்கம்பத்தில் தான் கோவிலின் திருவிழாக்காலங்களில் கொடியேற்றுவார்கள். அதற்கு அடுத்து பெருமாளின் வாகனமான கருடனின் மண்டபம் அமைந்திருக்கும். அதனையும் வழிபட வேண்டும்.

பெருமாளை தரிசிக்கும் போது முதலில் பாதத்தைத் தான் பார்க்க வேண்டுமா?

மகாபாரதத்தில் போர் நடக்கும் முன்பு கிருஷ்ணரிடம் போரில் உதவி கேட்டு முதலில் வந்த துரியோதனன், தூக்கத்தில் இருந்த கிருஷ்ணரின் தலையருகில் அமர்ந்தான். ஆனால் அடுத்து வந்த அர்ஜுனனோ பாதத்தின் அருகில் அமர்ந்திருந்தான். கிருஷ்ணர் கண் திறந்ததும் முதலில் அவருடைய அருள் பார்வை அர்ஜுனன் மீது விழுந்தது. அப்போதே பாண்டவர்களின் வெற்றி உறுதியாகி விட்டது. அர்ஜுனனுக்கு வெற்றி கிடைத்தது போல, பெருமாளின் பாத தரிசனம் எல்லாருக்கும் வெற்றி தரும் என்பதால் தான் பெருமாளை முதலில் பாதத்தை பார்த்து தரிசனம் செய்ய வேண்டும்.

 பிறகு லட்சுமி, ராமர், கிருஷ்ணர், நரசிம்மர், ஆஞ்சநேயர், சக்கரத்தாழ்வார், ஆண்டாள், ஆழ்வார்கள் ஆகியோரை தனித்தனியே வணங்க வேண்டும்.

 அடுத்து, கொடிக்கம்பத்திற்கு அருகில் சென்று வடக்கு நோக்கி தலை வைத்து, பெண்களாக இருந்தால் இரண்டு கை, இரண்டு கால், தலை ஆகிய ஐந்து உறுப்புகள் தரையில் படும்படியான பஞ்சாங்க நமஸ்காரமும், ஆண்களாக இருந்தால் உடல் முழுவதும் தரையில் படும்படியான சாஷ்டாங்க நமஸ்காரமும் செய்துவிட்டு வெளியில் வரவேண்டும்.

 கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் இறைவனை வழிபட்டால் மட்டும் போதாது. இறைவனுக்கு பிடித்த மாதிரியும் நடந்து கொள்ள வேண்டும். கோவிலில் தரும் எந்த பிரசாதத்தையும் கண்ட இடங்களில் போடாமல் அதற்கென வைக்கப்பட்டுள்ள இடங்களில் போட வேண்டும். கோவிலில் உள்ள தெய்வங்கள் அனைத்தும் எப்போதும் தியானத்தில் இருப்பதால் தொட்டு வணங்குதல் கூடாது. கோவிலில் இறை சம்பந்தப்பட்ட விஷயங்களை தவிர வேறெதும் பேசுதல் கூடாது. இறைவன் எளிமையையே விரும்புபவர். இறைவனை தரிசிக்க செல்லும் போது ஆடம்பரமான உடையை தவிர்ப்பது நல்லது.

 பெருமாள் கோவிலுக்கு செல்லும்போது சுக்கிரனின் சக்தி முழுமையும் கிடைக்க, அங்கு ஸ்தாபித்து இருக்கிற சுக்கிர தன்மையும் அதுக்கு தூண்டுகோலாக இருக்கிற, அங்கு பயன்படுத்துகின்ற பச்சை கற்பு ரம், சந்தனம், சம்பங்கி பு , துளசி தீர்த்தம் போன்றவை உதவும். மேலும் உடம்பில் அசுரத் தன்மையை தூண்டக் கூடிய உணவுகளை தவிர்த்து விரதம் இருந்து தெய்வ சிந்தனையுடன் வாழ்வில் ஈடுபட்டு நல்ல வாரிசுகளை உருவாக்க வேண்டும் என்பதற்காகத்தான் புரட்டாசியில் பெருமாள் வழிபாடு வலியுறுத்தப்பட்டது.

விஷ்ணு காயத்ரி மந்திரம் :

ஓம் நாராயணாய வித்மஹே

வாசுதேவாய தீமஹி

தன்னோ விஷ்ணு ப்ரசோதயாத்

இந்த மந்திரத்தை தினமும் சொல்வதால், ஆபத்துகளில் இருந்து விடுபடலாம். பாவங்கள் அகலும். நல்ல குணமும், அழகும் கொண்ட சந்ததிகள் உருவாகுவார்கள்.



Leave a Comment