திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் வெள்ளை யானை வீதி உலா...
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் ஆடி சுவாதியை முன்னிட்டு வெள்ளை யானை வீதி உலா. கோவிலுக்கு வந்த பக்தர்கள் குழந்தைகளுடன் வெள்ளை யானையை கண்டு வியந்தனர்.
ஆடி மாதம் சுவாதி நட்சத்திர தினத்தில் 63 நாயன்மார்களில் ஒருவரான சுந்தரமூர்த்தி நாயனாருக்கு திருக்கைலாய மலையில் சிவபெருமான் ஐராவதம் (வெள்ளை யானை) உருவத்தில் காட்சி கொடுத்தார் என்பது ஐதீகம். இதை நினைவு கூறும் வகையில், முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக விளங்கும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இன்று ஆடி சுவாதி நட்சத்திரத்தை முன்னிட்டு அதிகாலை 5 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, 5.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடந்தது.
தொடர்ந்து மாலை கோவில் யானை தெய்வானையின் உடல் முழுவதும் அரிசி மாவு திருநீறு பூசப்பட்டு யானை வெள்ளை நிறத்தில் காட்சியளித்தது. இதைத் தொடர்ந்து வெள்ளை நிற யானை தங்கசப்பரத்தில் 63 நாயன்மார்களில் ஒருவரான சுந்திரமூர்த்தி நாயனாரும் கோவில் உள்பிரகாரத்தில் வலம் வந்து 108 மகாதேவர் சன்னதியில் வெள்ளை நிற யானை முன்பு சேரமாள்பெருமானும், மாணிக்கவாசகரும் எழுந்தருளி காட்சி கொடுத்தார்.
பின்னர் கோவிலிலிருந்து தெய்வானை யானை வெள்ளை நிறத்தில் மேளதாளங்களுடன் புறப்பட்டு தங்க சப்பரத்தில் நாயன்மார்களில் ஒருவரான சுந்தரமூர்த்தி நாயனார் எழுந்தருளி உள்மாட வீதி மற்றும் வெளிமாட வீதி என எட்டு ரதவீதிகளையும் சுற்றி வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்தது. அப்போது பொதுமக்கள் வெள்ளை யானை வணங்கி நின்றனர்.
Leave a Comment