அருள்மிகு ஸ்ரீ லா ஸ்ரீ ஆதி அண்ணாமலையார் வட்ட கோவில் மகா கும்பாபிஷேகம்...
சுருளிமலையில் அருள்மிகு ஸ்ரீ லா ஸ்ரீ ஆதி அண்ணாமலையார் வட்ட கோவில் மகா கும்பாபிஷேக விழா ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள சுருளி மலையில் அமைந்துள்ளது அருள்மிகு ஸ்ரீ லா ஸ்ரீ ஆதி அண்ணாமலையார் வட்ட கோவில். இத் திருக்கோவிலில் சிவபெருமானுக்கு உகந்த நாட்களில் நடைபெற்று வரும் அனைத்து பூஜைகளும் வெகு விமர்சையாக நடத்தப்பட்டு வருகிறது.
இத்திருக்கோவில் 12 ஆண்டுகளுக்கு பின்பாக தற்போது புனரமைப்பு செய்யப்பட்டு இன்று நூதன புனராவர்த்தன மஹா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. முன்னதாக நேற்றைய தினம் விக்னேஸ்வர பூஜை, புண்யாகவாசனம், மகா கணபதி ஹோமம், அனுக்ஜை தொடர்ந்து பிரவேச பலி, அங்குரார்பணம், யாகசாலை பிரவேசம், முதல் கால யாகசாலை பூஜைகள், பிரவேச பலி, மகாபூர்ணகுதி, வேதிகா அர்ச்சனை உள்ளிட்டவை நடத்தப்பட்டது.
அதனைத் தொடர்ந்து இன்று காலை இரண்டாம் கால யாகசாலை பூஜைகள் மூலா மாலா மந்திர ஹோமங்கள், நாடி சந்தானம், மஹா பூர்ணாஹூதி உள்ளிட்டவை நடைபெற்று மஹாதீபாராதனை நடைபெற்றது. பின்னர் 8 மணிக்கு மேலாக யாத்திரதானம், கடம் புறப்பாடுதல் உள்ளிட்டவை நடைபெற்று ஸ்ரீ ஆதி அண்ணாமலையார் வட்ட திருக்கோவில் விமானத்திற்கும் ராஜகோபுரத்திற்கும் புனித நீர் கொண்டு மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து கும்பாபிஷேகம் செய்யப்பட்ட தண்ணீர் கொண்டு பக்தர்களுக்கு தீர்த்தவாரி தெளிக்கும் நிகழ்வு நடத்தப்பட்டது. பின்னர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள் ஆராதனைகள் நடைபெற்றது.
இன்று நடைபெற்ற இந்த கும்பாபிஷேக நிகழ்வில் கம்பம், சுருளிப்பட்டி, காமையகவுண்டன்பட்டி, கூடலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில் கலந்து கொண்ட அனைவருக்கும் அன்னதான பிரசாதம் வழங்கப்பட்டது.
Leave a Comment