சிறுவாபுரி முருகன் கோவிலில் ஆடி கிருத்திகை விழா...
சிறுவாபுரி முருகன் கோவிலில் ஆடி கிருத்திகையை முன்னிட்டு 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடங்களை சுமந்து வந்தும், காவடி எடுத்து வந்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த சிறுவாபுரியில் பிரசித்தி பெற்ற பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. ஆறு வாரங்கள் தொடர்ச்சியாக இங்கு வந்து நெய் தீபம் ஏற்றி வழிபட்டால் வேண்டுதல் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது. அதிலும் செவ்வாய்க்கிழமைகளில் சிறுவாபுரி முருகன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் என்பது அலை மோதும்.
ஆடி கிருத்திகை தினமான இன்று சிறுவாபுரி முருகன் கோவிலில் 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் தலையில் பால்குடம் சுமந்து வந்து வழிபட்டனர். சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு பால் குடங்களை சுமந்தபடி பெண்கள் பாதயாத்திரையாக சிறுவாபுரி முருகன் கோவிலை வந்தடைந்தனர். காவடிகளை சுமந்த படியும் பக்தர்கள் வந்து தங்களது நேர்த்திக் கடனை செலுத்தினர்.
ஆலயத்திற்குள் கொண்டு செல்லப்பட்ட பால் அங்குள்ள முருகனுக்கும் வள்ளி, தெய்வானைக்கும் அபிஷேகம் செய்யப்பட்டது. ஆடி கிருத்திகையை முன்னிட்டு சிறுவாபுரி முருகன் கோவிலில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
Leave a Comment