தங்க கருட வாகனத்தில் தாழம்பூ சூடி எழுந்தருளிய வரதராஜ பெருமாள்...
பிரசித்திபெற்ற தேவராஜ பெருமாள் கோவிலில் ஆடி கருடன் உற்சவத்தை முன்னிட்டு, தங்க கருட வாகனத்தில் தாழம்பூ சூடி வரதராஜ பெருமாள் எழுந்தருளிய கஜேந்திர மோட்சம் நிகழ்ச்சி அனந்த சரஸ் குளக்கரையில் வெகு விமரிசையாக நடைபெற்றது.
உலக புகழ் பெற்ற காஞ்சிபுரம் தேவராஜா பெருமாள் கோவிலில் வருடத்தில் மூன்று கருட சேவைகள் வைகாசி ,ஆனி , ஆடி மாதங்களில் நடைபெறும். இந்த ஆடி கருட உற்சவம் கஜேந்திர மோட்சம் என அழைக்கப்படும்.
காஞ்சிபுரம் தேவராஜ பெருமாள் கோவிலில் உள்ள அனந்த சரஸ் குளத்தில் சாபம் பெற்ற கந்தர்வன் எனும் முதலை,, யானையின் காலை கவ்விய பொழுது யானையானது வலி பொறுக்காமல் பூக்களை தும்பிக்கையால் எடுத்து பெருமாளே என அழைத்ததாகவும், யானையின் குரல் கேட்டு வரதராஜ பெருமாள் எழுந்தருளி சக்கரத்தை ஏவி யானையையும் முதலையையும் பிரித்து இருவருக்கும் மோட்சம் அளித்ததால் கஜேந்திர மோட்சம் என அழைக்கப்படுகிறது.
இந்த நிகழ்வில் வரதர் தங்க கருட வாகனத்தில் மஞ்சள் நிற பட்டாடை உடுத்தி மல்லி ,முல்லை, கனகாம்பரம் உள்ளிட்ட மலர்களைக் கொண்டு தருவித்த மாலைகள் அணிந்து ,கையில் தாழம் பூ சூடி, தேசிகர் மண்டபத்தில் இருந்து புறப்பட்டு அனந்த சரஸ் குளம் அருகே எழுந்தருளி கஜேந்திர மோட்சம் உற்சவம் நடைபெற்றது .
பின்னர் தங்க கருட வாகனத்தில் எழுந்தருளிய வரதர் நான்கு மாட வீதிகளை வலம் வந்து கோவிலை அடைந்தார். வழியெங்கும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
Leave a Comment