சினம் போக்கும் சின் முத்திரை !


 

சிவபெருமானுக்கு, 64 வடிவங்கள் இருப்பதாக புராணங்கள் சொல்கின்றன. இவற்றுள் ஈசன் யோக நிலையில் இருக்கும் வடிவம், தட்சிணாமூர்த்தி. இவர் சின் முத்திரை காட்டியபடி யோகத்தில் அமர்ந்திருப்பார். சுண்டு விரல், மோதிர விரல், நடுவிரல் ஆகியவை மடங்கி இருக்கும். சுட்டு விரல், பெருவிரலுடன் சேர்ந்திருக்கும். இதில் சுண்டு விரல் மனிதனின் ஆணவத்தைக் குறிக்கிறது. மோதிர விரல் மனிதனது செயல்களால் ஏற்படும் பாவ-புண்ணியங்களால் உண்டாகும் ‘கன்மம்’ என்ற குணத்தை சொல்கிறது. நடுவிரல் ‘மாயை’ என்னும் உலக வாழ்வு நிலையற்றது என்ற தத்துவத்தை உணர்த்துகிறது. சுட்டு விரல் மனிதனையும், பெருவிரல் இறைவனையும் குறிக்கிறது.

ஆணவம், கன்மம், மாயை ஆகியவற்றை விட்டு விட்டால், மனிதன் சுலபமாக இறைவனை அடையலாம் என்பதே ‘சின்’ முத்திரையின் தத்துவமாகும். ‘கன்மம் என்ற குணத்தில் உள்ள பாவத்தை விட்டுவிடலாம். ஆனால் புண்ணியத்தை ஏன் விட வேண்டும்’ என்ற எண்ணம் பலரது மனதிலும் சந்தேகத்தை விதைக்கலாம். பாவமோ, புண்ணியமோ எதுவாக இருந்தாலும் அதனை இறைவனுக்கு அர்ப்பணித்து மனதை பக்குவம் மிக்கதாக வைத்துக் கொள்ள வேண்டும். அப்போதுதான் இறைவனடியைச் சேர முடியும். அதற்கு மகாபாரதக் கதையில் வரும் கர்ணனே உதாரணம். அவன், தன்னுடைய புண்ணியத்தைக் கொடுத்த பிறகே, அவனது உயிர் அவனை விட்டுப் பிரிந்து இறைவனடி சேர்ந்தது.

இத்தகைய தத்துவம் மிக்க சின் முத்திரையை வைத்து தியானம் செய்பவர்களின் சினம் குறையும்.



Leave a Comment