மகாலட்சுமி கோவில்கள்!


 

சென்னை திருவான்மியூர் : சென்னையில் காமக்கோடி பரமாச்சாரியார் பேரருளோடு, அலைகடல் அன்னைக்கு மிக அற்புதமான ஆலயம் திருவான்மியூர் ஓரம் கட்டப்பட்டுள்ளது. கடலை நோக்கி மகாலட்சுமியும், ஸ்ரீமந்நாராயணனும் திருக்கல்யாண கோலத்தில் எழுந்தருளியுள்ளார்கள். இவர்களைத் தரிசித்து விட்டு பிரதட்சணமாக வந்தால், தெற்கே ஆதிலட்சுமி மேற்கில் தானிய லட்சுமி வடக்கில் தைரிய லட்சுமி மூவரையும் தரிசிக்கலாம். இந்த ஆலயத்தில் சங்க நிதிக்கும், பதும நிதிக்கும் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

திருமழிசை : சென்னை பூந்தமல்லியை அடுத்த திருமழிசையில் வீற்றிருந்த பெருமாள் கோவில் உள்ளது. இந்த பெருமானிடம் அஷ்டலட்சுமிகளும் ஐக்கியமாகி இருக்கிறார்கள். பெருமாளின் தலை கிரீடத்தில் 4 லட்சுமிகள், மார்பில் 2 லட்சுமிகள், பெருமாளின் இருபிறமும் பக்கத்துக்கு ஒருவர் என அஷ்டலட்சுமிகள் உள்ளனர். அஷ்டலட்சுமிகள் வீற்றிருக்கும் அந்த பெருமாளை சனிக்கிழமைகளில் துளசி மாலை சாத்தி வழிபட குடும்பத்தில் செல்வம் பெருகும் என்பது ஐதீகம்.

உத்திரமேரூர் : உத்திரமேரூர் திருத்தலத்தின் தாயார் ஆனந்தவல்லி ஆவார். தாயாருக்குத் தனிச் சந்நிதி உண்டு. இப்பிராட்டியாரின் திருவருளால் மாங்கல்ய பாக்கியம், பிள்ளைப்பேறு முதலியன கிடைப்பதால் இத்தலத்திற்குத் திருமாங்கல்யம் அதிக அளவில் காணிக்கையாகக் கிடைக்கிறது. அழகிய அஷ்டாங்க விமானம் கொண்ட அற்புதத் தலம் இது.

    

காஞ்சீபுரம் : காஞ்சீபுரம் ஸ்ரீ அஷ்டபுஜம் திருக்கோவிலின் தாயார் புஷ்பவல்லி ஆவார். பகவானின் திருநாமம் அஷ்டபுஜத்தான் என்பது. இத்தலத்தில் ஸ்ரீ வராகப் பெருமாள் தாயாரைத் தன் மடியில் வைத்துக் கொண்டு சேவை சாதிக்கிறார்கள். இதுவன்றி ஸ்ரீகாமாட்சி அம்மன் ஆலயத்தில் ஸ்ரீலஷ்மி தேவிக்கென தனிச் சந்நிதி உள்ளது.

சோழிங்கபுரம் : வடஆற்காடு மாவட்டம் அரக்கோணத்திலிருந்து மேற்கே சுமார் 25 கி.மீ. தொலைவில் உள்ள திருத்தலம் சோழிங்கபுரம் ஆகும். இந்த மலைக்கோவிலில் தனிச்சந்நிதியில் அமிர்தவல்லித் தாயார் எழுந்தருளியுள்ளார். அண்டிவரும் அன்பர்களுக்கு அமிர்தமயமான பலன்களை வழங்கி வருகிறார்.

திருத்தங்கல் : விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல் என்னும் திருத்தலத்தில் முனிவர்களின் வேண்டுகோளுக் கிணங்க திருமகள் அருண கமல மகாதேவி (செங்கமல நாச்சியார்) என்னும் திருநாமத்துடன் திருநின்ற கோலத்தில் அருள்பாலித்து வருகிறார்.

  

திருக்கண்ண மங்கை : திருவாரூருக்கு அடுத்துள்ள திருத்தலம் திருக்கண்ண மங்கையாகும். இங்கு தாயார் அமிர்தவல்லி திருச்சந்திதியில் ஒரு பெரிய தேன்கூடு உள்ளது. பல ஆண்டுகளாக இத்தேன்கூடு இருந்து வருவதாகக் கூறுகிறார்கள். முனிவர்கள் தேனீ வடிவத்தில் இருந்து தாயாரையும் பெருமாளையும் சேவித்து வருவதாக ஐதீகம்.

உத்தமர்கோவில் : திருச்சிக்கு அருகில் உள்ள திருத்தலம் பிச்சாண்டார் கோவிலாகும். உத்தமர் கோவில் என்றும் இதனை அழைப்பர். சிவன், பிரும்மா, விஷ்ணு மூவருக்கும் தனிச் சந்நிதிகள் ஒரே ஆலயத்தினுள் அடங்கியுள்ளன. இந்த அற்புதத் திருத்தலத்தின் நாச்சியார் பூர்ணவல்லித் தாயார் ஆவர். பூர்வா தேவி என்றும் அழைக்கப்பெறுகிறார்.

லால்குடி : திருச்சி மாவட்டத்தில் உள்ள லால்குடிக்கு திருத்தவத்துறை என்ற பெயரும் உண்டு. இங்குள்ள தலத்தில் தான் தாயார் தவம் இருந்து எம்பெருமானைத் தலைவராக அடைந்தார். இதேபோல் நாமக்கல் திருத்தலத்தின் தாயாரும் தவமிருந்து எம்பெருமானைத் தலைவராகப் பெற்றார் என்று கூறப்படுகிறது. இத்தாயாரின் திருநாமம் ‘ஹரி’ ஆகும்.

தலைச்சங்காடு : மாயவரம் - தரங்கம்பாடி பாதையில் ‘தலைச்சங்காடு’ என்ற திருத்தலத்தில் உள்ள தாயார் செங்கமலவல்லி ஆவார். இந்த நாச்சியார் நின்ற கோலத்தில் அருள்பாலித்து வருகிறார்.

 

திருக்கண்ணபுரம் : தஞ்சை மாவட்டம் திருக்கண்ணபுரத்தில் எம்பெருமானுக்கு ஸ்ரீதேவி, பூதேவி, ஆண்டாள், பத்மினி என்னும் நான்கு தேவியர்கள் தம் இரு பக்கம் சூழ எம்பெருமான் சௌரிராஜன் அருட்காட்சி நல்கி வருகிறார். அற்புதத் திருத்தலம் இது.

நாச்சியார்கோவில் : கும்பகோணத்திலிருந்து திருவாரூர் செல்லும் மார்க்கத்தில் நாச்சியார்கோவில் என்ற திருத்தலம் உள்ளது. அங்கு எம்பெருமான் இரண்டு திருக்கரங்களுடன் வஞ்சுளவல்லி தாயாருடன் அருட்காட்சி நல்கி வருவது மிகவும் விசேஷமானது. இங்கு தாயாருக்கெனத் தனிச் சந்நிதி கிடையாது.

  

திருவாரூர் : திருவாரூரில் ஸ்ரீ லெட்சுமி தேவிக்கு ஒரு ஆலயம் உள்ளது. இத்திருக்கோவிலின் தலவிருக்ஷமான புன்னை மரத்தடியில் தாயார் அவதாரம் செய்துள்ளார் என்பது ஐதீகம். இதனால் இப்பிராட்டியாருக்குப் புன்னைப் பிராட்டி என்பது திருநாமம்.

ஸ்ரீவில்லிபுத்தூர் : பிராட்டியாரின் அவதாரமான கோதை நாச்சியார் ஸ்ரீ வில்லிப்புத்தூர் திருத்தலத்தில் வடபத்திர சாயியான எம்பெருமானுடன் ஆண்டாளாக இருந்து அருள்பாலித்து வருகிறார்.

துறையூர் : துறையூருக்குச் செல்லும் பாதையில் திருவெள்ளறை என்னும் திருத்தலம் அமைந்துள்ளது. தாயார் தவம் செய்து பெரும் பேறு பெற்ற திருத்தலம்.

பெருமானின் திருநாமம் புண்டரீகாஷன். இத்திருக்கோவிலில் தாயாருக்குத்தான் முதலில் பூஜை நடைபெறும். இக்கோவிலைச் சேர்ந்த சுவாமி புஷ்கரணி ஸ்வஸ்திகா வடிவில் அமைந்திருப்பது மிக்க சாந்நித்யம் உடையதாகும்.

பிச்சாண்டார் கோவில் : திருச்சிக்கு அருகே பிச்சாண்டார் கோவிலில் தாயாரைச் சேவிக்கலாம். இங்குள்ள தாயாருக்கு பூரணவல்லி என்று திருநாமம். இக்கோவிலுள்ள மும்மூர்த்திகளுக்கும் சந்நிதிகள் உண்டு. சிவபெருமான் கபாலம் ஏந்தி பிசைக்கு வந்த போது முதலில் தாயார் பிசை இட்டார் என்றும் அதனால் அவரது கபாலம் நிரம்பி வழிந்தது என்பதும் இத்திருக்கோவிலின் சிறப்பைச் சொல்லும் புராண வரலாறாகும்.

நாமக்கல் : நாமக்கல் என்னும் தலத்தில் தவமிருந்து விஷ்ணுவை அடைந்தார் தாயார்! இத்தலத்தில் தாயாருக்கு ஹரி என்று திருநாமம். இங்கு தாயாருக்கு, நாயகரான நரசிம்ம சுவாமியை விட சிறப்பு அதிகம்.

திருமலை : திருமலை திருப்பதியில் ஸ்ரீவிக்னேஸ்வரரின் ஆலயம் ஒன்றுள்ளது. அதில் அஷ்டலட்சுமிகளான ஸ்ரீஆதிலட்சுமி, ஸ்ரீவீரலட்சுமி, ஸ்ரீகஜலட்சுமி, ஸ்ரீதான்யலட்சுமி, ஸ்ரீவிஜயலட்சுமி, ஸ்ரீதீபலட்சுமி, ஸ்ரீதனலட்சுமி, ஸ்ரீஐஸ்வர்யலட்சுமி எனும் திருநாமங்களோடு அர்ச்சாவதார மூர்த்திகளாக எழுந்தருளி அருள்பாலிக்கிறார்கள். இம்மூர்த்தங்களை ஜகத்குரு ஸ்ரீ ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்து வைத்தார் என்று கூறுகிறார்கள்.

ஸ்ரீரங்கம் : ஸ்ரீரங்கம் அம்மா மண்டப வீதி புது அக்ரகாரத்தில் அஷ்டலட்சுமி மண்டபம் என்றே ஒரு மண்டபம் உள்ளது. அதில் நுழைவுப்பகுதி முன் வாயிலுக்கு ஸ்ரீராஜராஜேஸ்வரி வாசல் என்பது பெயராகும். அம்மண்டபத்தினுள் எண் திசைகளுக்கும் ஒவ்வொன்றாக எட்டு லட்சுமி மூர்த்தங்கள் உள்ளன.

மதுரையில் அஷ்டலட்சுமி : மதுரை மையப்பகுதியில் புகழ்பெற்ற ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இந்த ஆலயத்தின் ஒரு பகுதியில் அஷ்டலட்சுமிகளுக்கு என்று தனி சன்னதி உள்ளது. 8 லட்சுமிகளும் வீற்றிருக்கும் காட்சி அற்புதமாக உள்ளது. மதுரை நகர மக்கள் லட்சுமி வழிபாட்டுக்கும், பரிகார பூஜைகளுக்கு இந்த அஷ்டலட்சுமிகளை ஆராதிக்கிறார்கள்.

 



Leave a Comment