பழனி மலைக்கோயில் 108 வலம்புரி சங்கு பூஜை
பழனி மலைக்கோயில் உலக நலன் வேண்டி 108 வலம்புரி சங்கு பூஜை மற்றும் அன்னாபிஷேகம் நடைபெற்றது.
பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி மலைக் கோயிலில் இன்று உலக நலன் மற்றும் விவசாய செழுமை வேண்டி 108 வலம்புரி சங்கு பூஜை மற்றும் அன்னாபிஷேகம் நடைபெற்றது. மலைக்கோயில் பாரவேல் மண்டபத்தில் தங்கச் சப்பரத்தில் பிரதான கலசம் வைக்கப்பட்டு புனித நீர் நிரப்பப்பட்டு முன்னதாக தாம்பாளத்தில் வலம்புரி சங்குகள் வைக்கப்பட்டு புனித நீர் நிரப்பப்பட்டு ரோஜா, தாமரை அலங்காரம் செய்யப்பட்டது.
தொடர்ந்து சிவாச்சாரியார்கள் வேத மந்திரம் முழங்க யாகம் நடைபெற்றது. யாக பூஜை நிறைவாக பூர்ணாகுதி செய்யப்பட்டு மகாதீபாராதனை நடைபெற்றது. பின்னர் கலசங்கள் கோவிலை சுற்றிவர செய்யப்பட்டு கலச தீர்த்தம் மற்றும் சங்க தீர்த்தம் அருள்மிகு தண்டாயுதபாணிக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் பச்சை கற்பூரம், சுத்த அன்னம்,வில்வ இலை கொண்டு அன்னாபிஷேகமும் நடைபெற்றது.
முன்னதாக அர்ச்சக ஸ்தானிக சங்கம் சார்பில் சண்முக நதியில் இருந்து தீர்த்தம் கொண்டுவரப்பட்டு அபிஷேகம் நடைபெற்றது. விழாவில் கலந்து கொண்டவர்களுக்கு அன்னம் பிரசாதமாக வழங்கப்பட்டது.
Leave a Comment