ஸ்ரீ மீனாட்சி சொக்கநாதர் திருக்கல்யாண வைபவம்...
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை ஸ்ரீ மீனாட்சி சொக்கநாதர் திருக்கோவிலில் திருக்கல்யாண வைபவம் வெகு விமர்சையாக நடைபெற்றது; திரளான பக்தர்கள் பங்கேற்பு.
அருப்புக்கோட்டை சொக்கலிங்கபுரத்தில் இந்து சமய அறநிலையத்துறைக்கு பாத்தியப்பட்ட பிரசித்தி பெற்ற ஸ்ரீ மீனாட்சி சொக்கநாதர் திருக்கோவில் அமைந்துள்ளது. இத்திருக்கோயில் பிரம்மோற்சவ விழா துவங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் விழாவின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாண வைபவம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
திருமண விழாவை முன்னிட்டு சிறப்பு அலங்காரத்தில் பட்டாடை அணிந்து, வண்ண மலர்கள் ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டு, ஸ்ரீ மீனாட்சி சகிதமாக சொக்கநாதர் சிறப்பு அலங்காரத்தில் கோயில் மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். தொடர்ந்து சிவ வாத்தியங்கள் முழங்க பழங்கள், பட்டுச்சேலை, பட்டுவேட்டி, திருமாங்கல்யம், வண்ணமலர்கள், இனிப்புகள் மற்றும் சீர்வரிசை பொருட்கள் கொண்டுவரப்பட்டு மணமேடைக்கு முன் வைக்கப்பட்டு சிறப்பு யாகம் நடத்தப்பட்டது.
பின்னர் மாங்கல்ய பூஜையை தொடர்ந்து மீனாட்சி அம்மனுக்கு சிவாச்சாரியார்கள் வேத மந்திரம் முழங்க திருமாங்கல்யம் அணிவித்து திருக்கல்யாணம் வெகு விமர்சையாக நடைபெற்றது. அப்போது அங்கு கூடியிருந்த பக்தர்கள் பக்தி கோஷம் எழுப்பி வழிபட்டனர். மாங்கல்யம் அணிவித்தலை தொடர்ந்து மாலை மாற்றும் நிகழ்ச்சியும், தீப, தூப, மகா தீபாராதனையும் நடைபெற்றது. அதன் பிறகு ஸ்ரீ மீனாட்சி சொக்கநாதர் திருமணக்கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின்னர் பக்தர்கள் அனைவருக்கும் திருமண விருந்து அளிக்கப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
Leave a Comment