கல்வியில் சிறக்க செல்ல வேண்டிய கோயில்கள்...
கல்வியில் சிறக்க செல்ல வேண்டிய கோயில்கள்...
ஓமாம்புலியூர்
சிதம்பரத்திற்கு தெற்கே 3 கி.மீ. தொலைவில் உள்ள தலம் இது. எங்குமில்லாத புதுமையாக தட்சிணாமூர்த்தி, கோஷ்ட தேவதையாக மட்டுமின்றி, கோயில் மூலவர் கர்ப்ப கிரகத்திற்கும், அம்பாள் சந்நதிக்கும் இடையில் ஐந்தரை அடி உயரத்தில் தனித்தும் அமர்ந்திருக்கிறார். அம்பாள் சிவ தத்துவத்தை உணர தவமிருந்த தாயும், அம்பாளுக்கு சிவபிரான் உபதேசம் செய்ததாகவும் வரலாறு உண்டு. வியாக்ரபுரீஸ்வரர் வந்து வணங்கியதால், அம்பாளுக்கு பிரணவ உபதேசம் செய்யப்பட்டதாலும் இத்தலத்திற்கு ‘ப்ரணவ வ்யாக்ரபுரம்’ என்றொரு பெயரும் உண்டு.
லால்குடி
திருச்சிக்கு அருகேயுள்ளது. இங்குள்ள சப்தரிஷீஸ்வரர் கோயில் புராதனமானது. இது ஒரு தேவார வைப்புத் தலம். இங்குள்ள வீணா தட்சிணாமூர்த்தி பெரும் அனுக்கிரக மூர்த்தியாக கொண்டாடப்படுகிறார்.
ஆரணி
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் உள்ள ஆதிகேசவப் பெருமாள் கோயிலில் லட்சுமி ஹயக்ரீவருக்கு தனிச் சந்நதி உள்ளது. கல்வியில் சிறக்க மாணவர்கள் இக்கோயிலுக்கு வந்து சிறப்பு வழிபாடுகள் செய்து செல்கின்றனர்.
திருஇந்தளூர்
இத்தலம் மயிலாடு துறைக்கு வெகு அருகில் உள்ளது. நூற்றியெட்டு திவ்யதேசங்களில் ஒன்று. இங்குள்ள பெருமாளின் திருப்பெயர் பரிமளரங்கநாதர் என்பதாகும். இக்கோயிலினுள்ளும் லட்சுமி ஹயக்ரீவருக்கென்று தனிச் சந்நதி உள்ளது.
திருவையாறு
இத்தலத்திலுள்ள ஐயாறப்பர் ஆலயத்தின் கருவறையின் பின்பகுதியைக் காணமுடியாது. சடாபாரத்தோடு திகழும் ஈசனாதலால் தட்சிணா மூர்த்தியின் சந்நதியோடு திரும்ப வேண்டியதுதான். குருபகவான் ஐம்புலன்களை அடக்கிய ஆமையை தமது வலது காலால் அழுத்தி மாபெரும் தத்துவ த்தை சொல்லாமல் சொல்கிறார். திருமாலே இவரிடம் உபதேசம் பெற்றதால் ஹரிகுரு சிவயோக தட்சிணாமூர்த்தி என்று பெயர். ஏதோ நேற்றுதான் செதுக்கியது போன்ற பேரழகும், முகத்தில் பொலியும் அமைதியும் கண்கொள்ளா அற்புதம். தஞ்சையிலிருந்து 9 கி.மீ. தொலைவில் உள்ளது.
தஞ்சாவூர்
தஞ்சை-திருவையாறு பாதையில் நகரத்தின் எல்லையிலேயே வெண்ணாற்றங் கரையில் மாமணிக்கோயில் அமைந்துள்ளது. அசுரர்களை அழித்த மகாவிஷ்ணு நீலமேகர், மணிக்குன்றப் பெருமாள், வீர நரசிம்மர் என்று மூன்று வடிவங்களில் தனித்தனி கோயில்களில் அருள்கிறார். பூதத் தாழ்வாரும், திருமங்கையாழ் வாரும் மூவரையும் சேர்த்தே மங்களாசாஸனம் செய்துள்ளனர். ஹயக்ரீவர் இங்கு லட்சுமியுடன் வடக்கு திக்கு நோக்கியிருப்பது சிறப்பாகும். கல்விக்கு ஹயக்ரீவரும், செல்வத்திற்கு லட்சுமியுமாக அருள்பாலிக் கின்றனர். இவர்கள் இருவருக்கும் ஏலக்காய் மாலை சாற்றி, நெய் விளக்கு, கற்கண்டு நிவேதனம் படைத்து வணங்கினால் கல்வியும், செல்வமும் நிறையும்.
Leave a Comment