பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரர் சுவாமி திருக்கோயிலில் வைகாசி விசாக பிரம்மோற்சவ கொடியேற்றம்...


கும்பகோணம் அருகேயுள்ள பட்டீஸ்வரம் ஞானாம்பிகை சமேத தேனுபுரீஸ்வரர் சுவாமி திருக்கோயிலில் வைகாசி விசாக பிரம்மோற்சவத்தை முன்னிட்டு கொடியேற்றத்துடன் நிகழ்ச்சி தொடங்கியது.

கும்பகோணம் அருகேயுள்ள பட்டீஸ்வரம் ஞானாம்பிகா சமேத தேனுபுரீஸ்வர சுவாமி திருக்கோயில் அன்னை பராசக்தி தவம் செய்ததும், சோழ மன்னர்களின் காவல் தெய்வமான துர்கை வடக்கு நோக்கி தனி சன்னதி கொண்டு எட்டு கரங்களுடன் விஷ்ணு துர்க்கையாகவும், லட்சுமி துர்க்கையாகவும் அருள்பாலிக்கிறார் காமதேனுவின் மகள் பட்டி பூஜித்து முக்தி பெற்ற தலமும், விஸ்வாமித்திரருக்கு பிரம்மரிஷி பட்டம் கிடைக்கப்பெற்றதும், திருஞானசம்மந்தருக்கு முத்து பந்தல் அமைத்து அதன் கீழ் நடந்து வரும் அழகை காண ஈசன் நந்தியை விலக கட்டளையிட்ட தலமும் ஆகும்.

 இத்தகைய சிறப்புபெற்ற தலத்தில் ஒவ்வொரு ஆண்டும் வைகாசி பிரம்மோற்சவம் நடைபெறுவது வழக்கம் அதுபோல இவ்வாண்டுக்கான விழா, இன்று காலை பஞ்சமூர்த்திகள் சிறப்பு அலங்காரத்தில் கொடிமரத்தின் அருகே எழுந்தருள, கொடிமரத்திற்கு பால், தயிர், மஞ்சள், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு நந்தியம்பெருமான் பொறிக்கப்பட்ட திருக்கோடி மங்கள வாத்தியங்கள் இசைக்க, வேத மந்திரங்கள் முழங்க, ஏற்றிப்பட்டு, மகா தீபாராதனை செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து தினமும் காலை, மாலையில் பாம்பு வாகனம், அன்னப்பறவை வாகனம், பச்சைக்கிளி வாகனம், காமதேனு வாகனம்,  உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் சுவாமி திருவீதியுலா நடைபெறுகிறது. விழாவில் முக்கிய நிகழ்ச்சியான 17 ஆம் தேதி 5 ஆம் நாள் தன்னைத்தான் வழிபடுதல் காளை வாகனத்தில் இறைவர் இறைவி ஓலைச்சப்பரத்தில் வீதியுலா 7 ஆம் நாளான 19 ஆம் தேதி திருக்கல்யாணம் 9 ஆம் நாளான 21 ஆம் தேதி கட்டுத் தேரோட்டம் வருகிற 24 ஆம் தேதி விடையாற்றியுடன் இவ்வாண்டுக்கான வைகாசி விசாக பிரம்மோற்சவம் நிறைவு பெறுகிறது.



Leave a Comment