ஆடியில் மட்டும் நடைசாத்தும் அம்மன் கோவில்


 

சாயல்குடி அருகே எஸ். தரைக்குடியில் பழமை வாய்ந்த உமைய நாயகி அம்மன் கோயில் உள்ளது. நிழல்தரும் மரங்கள் கோயிலை சுற்றி பூஞ்சோலையாக உள்ளது. இரண்டு புறமும் 22 அடி உயரமுள்ள முனீஸ்வரர் காவல் தெய்வமாக கம்பீரமாக காட்சி தருகிறார்.  ஒவ்வொரு ஆண்டும் ஆடி முதல் நாள் கோயில் நடைசாத்தப்பட்டு, ஆவணி முதல் தேதியன்று அதிகாலை 5:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு அம்மனின் முதல் நாள் பார்வை, காட்சிதரும் நிகழ்ச்சி ஆண்டு தோறும் நடந்து வருகிறது. பொதுவாக எல்லா அம்மன் கோயில்களிலும் ஆடி முழுவதும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு கூழ் காய்ச்சியும், பொங்கல் வைத்தும் வழிபாடு செய்வர். இக்கோயிலில் மட்டும் இதற்கு விதிவிலக்காக நடைபெறுவது சிறப்புக்குரியதாகும். மூலவரான உமையநாகிய அம்மன் சன்னதியில் மேற்கூரை எதுவும் கிடையாது. முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் பொன்னு பெருமாள் கூறுகையில், ஆடி மாதம் முழுவதும் அம்மன் இங்கிருந்து, நடைபயணமாக ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு சென்று, அங்குள்ள அக்னிதீர்த்தக்கடலில் தீர்த்தமாடி விட்டு ஆவணி முதல் தேதியன்று மீண்டும் கோயிலுக்கு திரும்பி வருவதாக ஐதீகம். இதுபோன்ற நடைமுறை காலந்தொட்டு பின்பற்றப்படுகிறது. குலதெய்வமாக கொண்ட வெளியூரில் உள்ள பக்தர்கள் ஆயிரக்கணக்கில் முதல்நாள் பார்வை நிகழ்ச்சியில் பங்கேற்க வருகின்றனர். ஆவணி கடைசி புதன்கிழமையன்று வடமாடு எருதுகட்டு விழா நடக்கும், என்றார்.

 



Leave a Comment