நரசிம்மர் காட்சியளித்த இடம்  சோளிங்கர்!


 

வேலூர் மாவட்டம் சோளிங்கர் யோக நரசிம்மர் விசேஷமான திருத்தலம். மலையின் மீது அமர்ந்து நம் மலை போலான துக்கங்களை பனி போல் ஆக்குகிறார் நரசிம்மர்!

சிறிய மலை பெரியமலை என உண்டு இங்கே! பெரிய மலைக்கு எதிரில் இயற்கை அழகோடு 406 படிகள் அமைந்து அழகிய குன்றின் மீது அமைந்துள்ளது யோக ஆஞ்ச நேயர் கோயில். யோக ஆஞ்சநேயருக்கு நான்கு திருக்கரங்கள் உள்ளன. ஒரு கையில் சங்கு, ஒரு கையில் சக்கரம், மற்ற இரு கைகளில் ஜபமாலை உள்ளன.

சிறிய மலையிலிருந்து பார்த்தால் யோக ஆஞ்சநேயரின் கண்கள் நேராக பெரிய மலையில் உள்ள யோக நரசிம்மரின் திருவடி நோக்கி அமைந்துள்ளது.பேய் பிசாசு பிடித்தவர் தீராத நோயினால் வருந்துபவர்கள் இம்மலைச் சுனையில் (குளம்) நீராடி, வாயு மைந்தனை வணங்கினால், பூரண குணம் பெறலாம்!

இங்கு பிறந்த தொட்டாச்சார்யர் ஆண்டுதோறும் காஞ்சி சென்று வரதராஜப்பெருமாளை தரிசிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். ஒரு முறை உடல் நிலை சரியில்லாத இவரால் காஞ்சி செல்ல முடியவில்லை.

இங்கு உள்ள தக்கான் குளக்கரையில் அமர்ந்து காஞ்சி பெருமாள் கோயிலில் நடக்கும் கருட சேவையை நினைத்து, பார்க்கமுடியவில்லையே என்று வருந்தினார். உடனே பெருமாள் கருட வாகனத்தில் இங்கு உள்ள நரசிம்ம குளத்தில் தரிசனம் தந்தார். இன்றும் காஞ்சி பெருமாள் கோயில் பிரம்மோற்ஸவத்தின் மூன்றாம் நாள் பெருமாள் கருட வாகனத்தில் எழுந்தருளி தொட்டாச்சார்யருக்கு அருள்பாலிப்பதாக ஐதீகம்.

   



சப்தரிஷிகள்... ஆஞ்சநேயர்!

வேலூர் - திருத்தணி வழியில் இருக்கிறது சோளிங்கர். சென்னையிலிருந்து அரக்கோணம் வரை ரயில் பயணம் செய்து அங்கிருந்து சோளிங்கருக்கு பேருந்து மூலம் செல்லலாம். சோளிங்கருக்கு வேலூர், திருத்தணி மற்றும் திருவள்ளூரில் இருந்து பேருந்து வசதி உண்டு.

தொண்டை நாட்டு 22 திவ்யதேசங்களில் ஒப்பற்ற திவ்யதேசம் இது. காஞ்சிபுரத்திற்கும், திருவேங்கடமலைக்கும் இடையிலுள்ள திருத்தலம்! சப்தரிஷிகளுக்காக கோபம் தணிந்து யோக முத்திரையுடன் நரசிம்மர் காட்சியளித்த இடம்.

சுவாமி உட்கார்ந்திருக்கும் பாறை அடிவாரம் வரை ஒரே மலையைச் சேர்ந்த குன்று என்பது அதிசயம். மிகச் சிறந்த பிரார்த்தனைத் தலம். மனஅமைதி தரும் அற்புதமான பூமி!

இந்த மலையில் உள்ள மூலிகை மரங்களால் ரத்தக்கொதிப்பு, இதயநோய் முதலான பக்தர்களின் பிரச்னை விரைவில் குணமாகிறது.

பக்த பிரகலாதனுக்காக காட்சி கொடுத்த நரசிம்மரின் அவதாரத்தை தாங்களும் தரிசிக்க வேண்டுமென வாமதேவர், வசிஷ்டர், கத்யபர், அத்திரி, ஜமத்கனி, கவுதமர், பரத்வாஜர் ஆகிய சப்தரிஷிகளும் இங்கு வந்து தவமிருந்தனர். விஸ்வாமித்திரர் இத்தலத்தில் சிறிது நேரம் நரசிம்மனை வழிபட்டு வரம் பெற்றாராம். அதேபோல் தங்களுக்கும் பெருமாளின் தரிசனம் கிடைக்க வேண்டும் எனும் ஆவல் கொண்டு அவர்கள் இங்கு தவமிருந்தனர்.

ராமாவதாரம் முடிந்ததும் ஸ்ரீராமன் ஆஞ்சநேயரிடம், ""இந்த மலையில் தவம் செய்யும் ரிஷிகளுக்கு அரக்கர்களால் இடைஞ்சல் ஏற்படுகிறது. அதைப் போக்கி வை'' என்றார். அதன்படி ஆஞ்சநேயர் இங்கு வந்து காலன், கேயன் என்னும் இரு அரக்கர்களுடன் சண்டை செய்ய, அது முடியாமல் போனதால் ஸ்ரீராமனை வழிபட்டு அவரிடமிருந்து சங்கு, சக்கரங்களை பெற்று அதன் மூலம் அரக்கர்களை அழித்து ரிஷிகளை காப்பாற்றினார் என்கிறது ஸ்தல புராணம்.

கடைசியில் ரிஷிகளின் தவத்தினை மெச்சிய பெருமாள் அவர்களது விருப்பப்படி நரசிம்ம மூர்த்தியாக காட்சி கொடுத்தார். இந்த அவதாரத்தை தரிசித்துப் பூரித்த ஆஞ்ச நேயரிடம், ''நீ எனக்கு முன்பாக கையில் சங்கு சக்கரத்துடன் யோகத்தில் அமர்ந்து என் பக்தர்களின் குறைகளை போக்கி அருள்வாயாக!'' என அருளினார்!

அதன்படி நரசிம்மர் கோயில் உள்ள மலைக்கு அருகில் உள்ள சிறிய மலையலில் யோக ஆஞ்சநேயராக சங்கு சக்கரத்துடன் அருள்பாலித்து வருகிறார்.

 



Leave a Comment