உடலை கடினமாக வளைப்பது தான் யோகவா!


 

 

 யோகா என்றாலே பலரும் உடலை வளைத்துச் செய்யும் ஆசனங்கள் என்றே எண்ணுகிறார்கள். யோகா என்பது பல பரிமாணங்கள் கொண்டது. ஆனால், இன்றைய உலகோ, யோகத்தின் உடலளவிலான பரிமாணத்தை மட்டுமே பரைசாற்றுகிறது. யோக முறையில் ஆசனங்களுக்கான முக்கியத்துவம் மிகக் குறைவு. கிட்டத்தட்ட இருநூறுக்கும் மேற்பட்ட யோக சூத்திரங்கள் உள்ளது. அதில் ஒன்றே ஒன்று மட்டும்தான் ஆசனங்களைப் பற்றிப் பேசுகிறது. ஆனால், எப்படியோ, இந்த ஒன்று மற்ற எல்லாவற்றையும் விட அதிக முக்கியத்துவத்தைப் பெற்றுவிட்டது. இது பல வழிகளில் இன்று உலகம் சென்று கொண்டிருக்கும் திசையை வெளிச்சமிட்டுக் காட்டுகிறது. இன்றைய நவீன உலகம், ஆழமான பரிமாணங்களை விடுத்து, மேலோட்டமான நிலைகளை விரும்புவதையே இது காட்டுகிறது. இந்நிலையை மாற்றி, மேலோட்டமான உடலளவிலான கவனத்தில் இருந்து, மனிதர்களை அவர்களின் உள்நோக்கி பயணப்பட வழி செய்ய வேண்டும். சோகத்தில் ஆழ்ந்து, உளச்சோர்வில் உறைந்து போய் எனக்கு பழக்கமில்லை.

இல்லையெனில் இன்று ‘ஹட யோகா’ என்ற பெயரில் உலகில் சொல்லித் தரப்படும் பயிற்சிகளையும், யோகத்தின் சாரமே இவ்வளவுதான் என்று மக்கள் நிர்ணயித்திருப்பதையும் பார்த்து நான் உறைந்து போயிருப்பேன். இங்கே கற்றுத் தரப்படும் பயிற்சிகள், அந்தச் செயல்முறைகள் வெறும் உடலைப் பற்றியதாகவே இருக்கின்றன. அவற்றின் உயிரோட்டம் தொலைந்து போய், அதுவும் ஏதோ உடற்பயிற்சி போல் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. இதனால் தான் நம் பாரம்பரியத்தில், இப்பயிற்சிகளை வாழும் ஒரு குருவிடம் இருந்து நேராகக் கற்பது அவசியம் என்று வலியுறுத்தப்பட்டது. அவர் இப்பயிற்சிகளை அதற்கே உரித்தான உயிரோட்டத்துடன் வழங்குவார். இந்த யோக முறைகள் உங்கள் உடலை மிக நாசுக்காக ஊக்குவித்து, அதை முற்றிலும் வேறு நிலையில் செயல்படத் தூண்டிடும். யோகா என்பது, உங்கள் உச்சநிலையை அடைய உதவும் கருவி. ஒவ்வொரு ஆசனாவும், ஒவ்வொரு முத்ராவும், ஒவ்வொரு சுவாசிக்கும் முறையும், யோகத்தின் ஒவ்வொரு அம்சமும் இது ஒன்றை நோக்கித்தான் உருவாக்கப்பட்டிருக்கிறது.



Leave a Comment