ஸ்ரீவாஞ்சியம் (கார்த்திகை ஞாயிறுகளில் அதிகாலை தீர்த்தவாரியும் உற்சவமும்!
திருவாரூர் மாவட்டத்தில் நன்னிலத்தில் அமைந்துள்ள பரம பவித்ரமான சிவத்தலம் ஸ்ரீவாஞ்சியம். காசிக்குச் சமமாகப் போற்றப்படும் ஆறு தலங்களுள் முதன்மையானது. வியாசர் வடமொழியில் இயற்றியருளிய ஸ்காந்த புராணம்; பிரம்மாண்ட புராணம் ஆகியவை இத்தலத்தின் சீர்மையினைப் பறைசாற்றுகின்றன. உலகெலாம் உணர்ந்து ஓதற்கரிய மூர்த்தியான சிவபரம்பொருள் இத்தலத்தில் ஸ்ரீவாஞ்சிநாதர் எனும் அற்புதத் திருநாமம் கொண்டு எழுந்தருளியுள்ளார். அம்பிகையின் திருநாமம் மங்களாம்பிகை.
எண்ணற்ற தேவர்களும் தெய்வங்களும் இத்தலத்துறையும் சிவமூர்த்தியைப் போற்றித் துதித்து உய்வு பெற்றுள்ளனர். எமதர்மர் பேரருள் பெற்ற தலமாகவும் திகழ்வதால் இங்கு இவரே சுவாமிக்கும் உமையம்மைக்கும் வாகனத் திருத்தொண்டு புரிந்து வருகின்றார், மேலும் இவருக்கு இத்தலத்தில் தனிச்சன்னிதியும் உண்டு. இவரை வணங்கிய பின்னரே மூல மூர்த்தியை வழிபடுதல் மரபு. நால்வர் பெருமக்கள், அருணகிரிநாதர்; வள்ளலார் ஆகியோரால் பாடல் பெற்றுள்ள சிறப்புப் பொருந்தியது இத்தலம்.
பிற சிவத்தலங்களைப் போன்று ஸ்ரீவாஞ்சிய தரிசனம் அவ்வளவு எளிதில் கிடைக்கப் பெறுவதன்று. அதீத சக்தி பொருந்திய பரிகாரத் தலமாகத் திகழ்வதால் ஆன்மாக்களின் பன்னெடுங்கால கர்மவினைப் பயன்கள் கடும் பிரயத்தனமின்றி இத்தலத்தினை அண்ட விடுவதில்லை. தரிசிக்க விழையும் அன்பர்களுக்கும் ஏதேனும் இடர்களும் சோதனைகளும் வந்த வண்ணமிருக்கும். இது ஏராளமான அன்பர்களின் கண்கூடான அனுபவம். நாயன்மார்களையே சுவாமி சோதித்தன்றோ ஆட்கொண்டருளினார், நாம் மட்டும் விதிவிலக்காகி விடுவோமா என்ன!
இருப்பினும் இறைச் சோதனைகள் அடியவர்களின் பக்தியையும் வைராக்யத்தையும் உறுதிப்படுத்தவே நடந்தேறுகின்றன எனும் புரிதல் மிக அவசியமானது. ஸ்ரீவாஞ்சிநாதப் பெருமானின் திருவடிகளையே உபாயமாகப் பற்றி, எவ்விதமாயினும் தரிசித்தே தீருவது என்று உள்ள உறுதியுடன் பிரயத்தனம் மேற்கொள்ளும் அடியவர்களுக்கு, கருணைப் பெருங்கடலான ஸ்ரீவாஞ்சிநாதப் பெருமான் பெரிதும் திருவுள்ளம் உவந்தருளித் திவ்ய தரிசனமும் தந்தருள்வார் என்பது தெளிவு.
இத்தல தீர்த்தமான குப்த கங்கை புண்ணியங்களின் உறைவிடமாகத் திகழ்வது. சாம்போப புராணம் இத்தீர்த்தத்தின் பிரபாவத்தை விரிவாகப் பேசுகிறது. கார்த்திகை மாத ஞாயிறுகளில் இத்தீர்த்தத்தில் மூழ்கியெழுவது கற்பகோடிப் பிறவிகளின் கழுவாயற்ற கொடிய பாவங்களையும் அழித்தொழிக்க வல்லது என்று சாத்திரங்கள் அறுதியிடுகின்றன. அப்புண்ணிய தினங்களில் அதிகாலையில் சுமார் 4:30 மணி அளவில் சுவாமி திருச்சன்னிதியினின்றும் வெளிப்பட்டருளி குப்த கங்கைக்கு எழுந்தருள்வார்.
பக்தர்கள் முன்னமே தங்கள் இல்லங்களில் நீராடி முடித்துப் பின்னர் திருக்குளத்துக்கு அருகில் புண்ணிய நீராடத் தயார் நிலையில் இருப்பர். சுவாமி தீர்த்தவாரி கண்டருளும் அச்சமயத்திலேயே அடியவர்களும் திருக்குளத்தில் தீர்த்தமாடிப் பிறவிப் பயன் எய்துவர். குறிப்பாக கார்த்திகை மாத இறுதி ஞாயிறன்று நடந்தேறும் விழா கூடுதல் விசேடமானது. பல்லாயிரக் கணக்கானோர் இதனைத் தரிசிக்கக் கூடுவர்.
இவ்வருடம் பின்வரும் தேதிகளில் வருகின்றது (நவம்பர் 19, 26; டிசம்பர் 3, 10). மற்ற ஞாயிறுகளில் பங்கேற்க இயலாது போனாலும் இறுதி ஞாயிற்றுக் கிழமை (டிசம்பர் 10ஆம் தேதியன்று) இவ்வுற்சவத்தைத் தரிசித்தும் பங்கேற்றும் ஸ்ரீவாஞ்சிநாதப் பெருமானின் திருவருளால் வினைகள் நீங்கப் பெற்றுய்வு பெறுவோம்!!!
Leave a Comment