யுகாதி அன்று விரதமிருந்து வழிபாடு செய்வது எப்படி?


ஒவ்வொரு வருடமும் பங்குனி மாதத்தில் வருகிற அமாவாசைக்கு மறுதினம் சாந்திரமான வருடம் என்ற பெயரில் சந்திரன் பன்னிரெண்டு அம்சங்களோடு திகழும் மாதங்கள் தொடங்குகின்றன. அதன்படி ஒவ்வொரு அமாவாசைக்கு மறு நாள் வரும் பிரதமை முதல் அடுத்துவரும் அமாவாசை வரை கணக்கிடப்படும் மாதங்களுக்கு வடமொழியில் ஒவ்வொரு பெயர் உண்டு. இந்த மாதங்களின் பெயர்கள் பவுர்ணமி எந்த நட்சத்திரத்தின் நாளில் நிகழ்கிறதோ அந்த நட்சத்திரத்தின் பெயரில் அழைக்கப்படும்.

பங்குனி மாத அமாவாசைக்கு மறுநாள் பிரதமையில் யுகாதி கொண்டாட வேண்டும். அன்று அமாவாசை ஒரு நாழிகை இருந்தால்கூட மறுநாள்தான் யுகாதி கொண்டாட வேண்டும் என்பது விதி. மனித வாழ்க்கையில் இன்ப துன்பங்கள் மாறிவரும் என்பதையும் அதைப் பொறுமையோடு எதிர்கொள்ள வேண்டும் என்பதையும் இந்த யுகாதி பண்டிகை உணர்த்துகிறது.

காலையில் எழுந்து புனித நீராடி, கௌரி தேவியை நினைத்து, தீபம் ஏற்றி வழிபட்டு விரதத்தை ஆரம்பிக்க வேண்டும். புதிய பஞ்சாங்கத்தைப் பூஜையறையில் வைத்து, அதைச் சந்தனம், குங்குமம், மலர்களால் அலங்கரிக்க வேண்டும். தொடர்ந்து ஏழு ருசியுள்ள பச்சடியைச் செய்ய வேண்டும். இதற்கு சத்ருஜி பச்சடி என்று பெயர். இதில் உப்பு, புளிப்பு, இனிப்பு, கசப்பு, கார்ப்பு, உவர்ப்பு, துவர்ப்பு ஆகிய ருசிகள் இருக்க வேண்டும்.

விநாயகர், பெருமாள், கௌரி அம்பிகை மற்றும் இஷ்ட தெய்வம், குலதெய்வங்களை முன்வைத்து ஒப்பட்லு என்கிற விசேஷ போளி, புளியோதரை, பால் பாயசம் செய்து ஏழு ராகங்கள் பாடி தெய்வங்களுக்குப் படையல் செய்து, ஆரத்தி செய்வது வழக்கம். அனைவரும் அஷ்டாங்க நமஸ்காரம் செய்துவிட்டு பிரசாதம் எடுத்துக்கொண்டு, மங்கள ஆரத்தி செய்வது வழக்கம்.

யுகாதி பண்டிகை ஒரு ஆண்டாகிய யுகத்தின் தெய்வ அனுகூலத்தையும் உலக மக்களின் வாழ்க்கை நலன்களையும் முன்னதாகவே அறிந்துகொள்ளக்கூடிய காலக்கண்ணாடியாக திதி, வாரம், நட்சத்திரம், யோகம், கரணம் என்ற ஐந்து விதமான அங்கங்களைக் கொண்ட மங்களகரமான பஞ்சாங்கப் படனமாக மலர்கிறது.



Leave a Comment