வீட்டில் விளக்கேற்றுவது எதற்காக?


 

நம் கலாச்சாரத்தில் விளக்கு ஏற்றினால், கடவுளை வணங்குவதுபோல, கன்னத்தில் போட்டுக்கொள்ளும் பழக்கம் உள்ளது. கார்த்திகைதீபத்தின்போது வீட்டில் நூற்றுக்கணக்கில் தீபங்கள்ஏற்றிக் கொண்டாடுகிறோம். பூஜைஅறையில் பகல் வேளையிலும் விளக்கு ஏற்றிவைக்கிறோம். அங்கங்கே பெண்கள்ஒன்று சேர்ந்து விளக்கு பூஜையும் செய்கிறார்கள். எதற்காக விளக்குக்கு இவ்வளவு முக்கியத்துவம் தரப்படுகிறது?

நமது கலாச்சாரத்தில் ‘விளக்கு’ என்பது மிக முக்கியமானதாக வணங்கப்பட்டு வந்திருக்கிறது. இது ஏதோ விளக்கை ஏற்றி, சற்று நேரம் எவ்வாறோ ஒளிரட்டும் என்பது போலல்ல. விளக்கை எப்படி ஏற்ற வேண்டும், அதன் தீபம் எப்படி இருக்க வேண்டும் என்பதும் கூட சொல்லப் பட்டிருக்கிறது. இந்த விளக்கை ஏற்றும் போது, அதற்கு விளக்கெண்ணெய், நெய் அல்லது நல்லெண்ணெய் மட்டும்தான் பயன்படுத்த வேண்டும். இப்பொருட்களை உபயோகிக்கும் போது மட்டும் தான், விளக்கின் தீபத்தில் ஓரு ஒளிவட்டம் வெளிப்படுகிறது. இந்த ஒளிவட்டத்தினால் நாம் வசிக்கும் இடம் சுத்தமாகும் வாய்ப்பு அதிகரிக்கிறது. அது மட்டுமல்லாமல், தீபத்தின் இந்த ஒளிவட்டம், அது இருக்கும் விதத்திலேயே, வணக்கத்திற்கு உரியதாக இருக்கிறது.

   

விளக்கை ஏற்றும் போது விளக்கெண்ணெய், நெய் அல்லது நல்லெண்ணெய் மட்டும்தான் பயன்படுத்த வேண்டும். நம் கண்ணுக்குத் தெரியாத பல விஷயங்கள் உள்ளன. அதில் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்கு இந்த ஒளிவட்டம் உதவுகிறது. நம்மைப் பாதுகாக்கும் தன்மை எதுவாக இருந்தாலும் அதை வணங்குவது நம் பண்பாடு. எனவேதான், பூஜையறையில், கடவுளை வணங்கும்போது தீபத்தையும் ஏற்றிவணங்குகிறோம். இதனால்தான் மனிதர்கள் சேர்ந்து புழங்கும் இடத்தில், அது வீடாக இருந்தாலும் சரி, தொழில் நடக்கும் இடமாக இருந்தாலும் சரி, அவ்விடத்தில் நாளெல்லாம் விளக்கு ஏற்றி, அதை ஒளிரவிடும் பழக்கம் இருக்கிறது. இவ்விடங்கள் தான் என்றில்லாமல், நீங்கள் படுக்கும் இடம், குழந்தைகள் படிக்கும் இடம், மற்றும் பொதுவாக நீங்கள் அதிக நேரம் இருக்கும் இடங்களில் விளக்கு ஏற்றி வைப்பது நிச்சயம் நல்லது. இது நம் மனநிலைக்கு, நம் ஆரோக்கியத்திற்கு மற்றும் நம் சூட்சும உடலிற்கும் நன்மை பயக்கும்!



Leave a Comment