மகா சிவராத்திரி நாளில் விரதம் இருப்போருக்கு கிடைக்கும் மகத்துவங்கள்...
சிவ ராத்திரி விரதம் இருப்பதால் தெரியாமல் செய்த பாவங்களுடன், தெரிந்தே பாவங்கள் செய்திருந்தாலும் அவை நம்மை விட்டு நீங்கிப் போகும் என்று ஐதீகம்.
மகாசிவராத்திரி நாளில் இரவெல்லாம் கண் விழித்து சிவபெருமானை வழிபட வேண்டும். இதனால் இறைவன் அருள் கிடைப்பதோடு நினைத்த காரியம் நடக்கும் என்பது முன்னோர்கள் வாக்கு.
ஒரு வருடம் சிவராத்திரி விரதம் இருப்பது என்பது நூறு அசுவமேத யாகம் செய்த பலனும், பல தடவை கங்கா ஸ்நானம் செய்த பலனும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
இந்த நாளில் சிவன் கோயில்களுக்குச் சென்று ஈஸ்வரனை வழிபட்டால் மன அமைதி, வாழ்க்கையில் முன்னேற்றம், தீய சக்திகள் நீங்கி நன்மைகள் நமக்கு உண்டாகும்.
மாசி மாதத்தில் தேய்பிறை சதுர்த்தசி நாள் மகா சிவ ராத்திரியாக கடைபிடிக்கப்படுகிறது. இந்த நாளின் சிறப்புகள் குறித்து கருட புராணம், கந்த புராணம், பத்ம புராணம், அக்னி புராணம் உள்ளிட்ட பல்வேறு நூல்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. மகா சிவ ராத்திரி நாளில் விரதம் இருப்போருக்கு கிடைக்கும் மகத்துவங்கள் என்ன என்பது பற்றியும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிவராத்திரிக்கு முதல் நாள் ஒரு வேளை மட்டுமே உணவு உண்ண வேண்டும். சிவராத்திரி அன்று அதிகாலையிலேயே எழுந்து குளித்து விட்டு, சூரிய உதயத்தின் போது காலையில் வீட்டில் செய்ய வேண்டிய பூஜையை முடிக்க வேண்டும். அதன் பின் சிவன் கோவிலுக்குப் போய் முறைப்படி தரிசனம் செய்ய வேண்டும்.
சிவபூஜை செய்யும் இடத்தை மலர்களால் அலங்கரித்து நண்பகலில் குளித்து மாலையில் சிவார்ச்சனைக்கு உரிய பொருட்களோடு சிவன் கோவில் சென்று ஏற்பாடுகளைச் செய்யலாம். மாலையில் மீண்டும் குளித்து வீட்டில் சிவபூஜை செய்ய வேண்டும். வீட்டிலேயே இரவின் நான்கு ஜாமங்களிலும் முறைப்படிப் பூஜை செய்தலும் நலம். வில்வ இலைகளால் அர்ச்சனை செய்தல் கூடுதல் உத்தமம்.
Leave a Comment