பிரம்மஹத்தி தோஷம் !


பிரம்மஹத்தி தோஷம் !

பிரம்மத்தினை உணர்ந்தவரை கொலை செய்வதாலோ, பிரம்மத்தினை உணர்ந்தவருக்கு தொல்லைகள் கொடுத்தாலோ, பிரம்மத்தினை உணர்ந்தவரை பழித்து பேசினாலோ உண்டாகும் தோஷம் பிரம்மஹத்தி தோஷம் ஆகும். கொடுமையான தோஷங்களில் இந்த பிரம்மஹத்தி தோஷமும் ஒன்று. பிராமணர் என்பவர் பிறப்பால் ஏற்படும் உயர்வு நிலை ஆகாது. பிரம்மம் ஆகிய கடவுளை உணர்ந்தவர் எவரோ அவரே பிராமணர் ஆவார். ராவணனை ராமபிரான்கொன்றதால் ராமபிரானுக்கு பிரம்மஹத்தி தோஷம் பிடித்தது. அதே போல் எந்த ஒரு உயிருக்கும் தொல்லைகள் தரவும் நமக்கு உரிமை கிடையாது. அவ்வாறு நாம் தெரிந்தோ அல்லது தெரியாமலோ செய்யும் பாவங்கள் அனைத்தும் தோஷமாக மாறும் என்பது திண்ணம்.

 

பிரம்ம ஹத்தி தோஷம் பரிகாரம்!
பிரம்மஹத்தி தோஷத்திற்க்கு பரிகாரம் என்றால் திருவிடை மருதூர் கோவிலில் பிரம்மஹத்தி தோஷ பரிகார பூஜை செய்து கோவிலின் தலைவாசல் வழியாக சென்று பின்வாசல் வழியாக வரவேண்டும் என்பது மரபு. மதுரை மன்னனுக்கு பிடித்திருந்த பிரம்மஹத்தி தோஷம் இக் கோவிலின் வழியாக இம்முறையில் சென்றுவந்தபோது நீங்கியதாக கூறப்படுகிறது.  பெரும்பாலானவர்கள் சொல்வது இந்தக்கோவிலின் பரிஹார முறையைத்தான்.

இதைத்தவிர வேறு சில எளிதான பரிஹாரமுறைகளும் சொல்லப்படுகிறது.
கடும் பிரம்மஹத்தி தோஷம் நீங்க‌  ராம நாதபுரம் அருகே தேவிபட்டினத்தில் ராமபிரான் கடலுக்கு அடியில் உருவாக்கிய நவக்கிரகங்களுக்கு தகுந்த வைதீகர் மூலம் பூஜைகள் செய்து கடலில் நீராடி வழிபட்டு அங்குள்ள கடலடைத்த பெருமாளை வணங்கினால் பிரம்மஹத்திதோஷம் நீங்கும் என்பது நம்பிக்கை

பழமையான சிவன் கோவில்களில் அனைத்து சன்னதிகளிலும் பஞ்சக்கூட்டு எண்ணெய் கொண்டு விளக்கேற்றிவந்தால் பிரம்மஹத்தி தோஷம் நீங்கும் என்பது ஐதீகம். ராமேஸ்வரம் கடலில் நீராடி அனைத்து தீர்த்தங்களிலும் குளித்து ஒரு நாள் அங்கேயே தங்கி இருந்து மறுநாள் ராமேஸ்வரம் அருகில் தனுஷ்கோடிசெல்லும் வழியில் உள்ள ஜடாமகுடேஸ்வரர் கோவிலில் உள்ள ஜடாமகுட தீர்த்தத்தில் நீராடி ஜடாமகுடேஸ்வரரை வழிபட்டு வந்தால் பிரம்மஹத்தி தோஷம் நீங்கும் என்பது நம்பிக்கை. 

ஏனென்றால் ராவணனுடன் வதம் செய்து ராவணனை கொன்ற பிரம்மஹத்தி தோஷம் இத்தலத்தில்தான் ராமபிரானுக்கு நீங்கியதாக வரலாறு.

 ஒவ்வொரு அமாவாசை தினத்தன்று, மாலை 5 மணிக்கு சிவன் கோவிலுக்கு சென்று, ஒன்பது சுற்றுகள் சுற்றிவந்து சிவனை வணங்கிவரவேண்டும். 
இதுபோல ஒன்பது அமாவாசை தினங்களில் சுற்றிவந்து வணங்கி, சிவனுக்கு மூன்று அகல் விளக்கு ஏற்றி, அர்ச்சனையும், அபிஷேகம் செய்து வந்தால் சிவபெருமான் அருள்பாலித்து, பிரம்மஹத்தி தோஷத்தை நீக்குவார் என்பது ஐதீகம். இவைகளை செய்வதால் பிரம்மஹத்தி தோஷத்தால் அனுபவித்து வரும் பாதிப்புகளில் இருந்து விடுதலை கிடைக்கும் என்பது நம்பிக்கை.

இந்திரன் மற்றும் வரகுண பாண்டியன் போன்றோரும் சிவ பெருமானை வணங்கியே தங்களின் பிரம்மஹத்தி தோஷத்தினை நீக்கிக் கொண்டனர் என்பதை புராணங்கள் தெளிவாக உரைக்கின்றன.

 

 

 

 



Leave a Comment