திருவாரூர் தியாகராஜ சுவாமி ஆலயத்தில் பங்குனி உத்திர கொடிஏற்றம்...
திருவாரூர் தியாகராஜ சுவாமி ஆலயத்தில் பங்குனி உத்திர ஆழித்தேரோட்ட விழா வரும் மார்ச் 21ம் தேதி நடைபெறுகிறது: இன்று கொடிஏற்றத்துடன் துவங்கிய நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை அறிவிப்பு…
உலக பிரசித்திபெற்ற திருவாரூர் ஆழித்தேரோட்ட விழா வரும் மார்ச் 21ம் தேதி நடைபெற உள்ளதையொட்டி இன்று திருவாரூர் ஸ்ரீதியாகராஜ சுவாமி ஆலயத்தின் பெரிய கொடிமரத்தில் கொடியேற்ற உற்சவம் விமர்சையாக நடைபெற்றது.
சைவ சமயத்தின் தலைமை பீடமாகவும், பூமியில் தோன்றிய முதல் ஊர் என அழைக்கப்படும் திருவாரூர் அருள்மிகு ஸ்ரீதியாகராஜ சுவாமி ஆலயத்தில் பங்குனி உத்திரதிருவிழா மற்றும் ஆழித்தேரோட்ட விழா தொடக்கமாக இன்று காலை ஆலயத்தின் பிரதான பிரகாரத்தில் உள்ள கொடியேற்ற உற்சவம் விமர்சையாக நடைபெற்றது.
முன்னதாக அதிகாலை ஸ்ரீவிநாயகர், ஸ்ரீசுப்ரமணியர், ஸ்ரீசந்திரசேகரர், ஸ்ரீசண்டிகேஸ்வரர் ஆகிய சுவாமிகள் அலங்கரிக்கப்பட்டு வீதியுலா வந்து மூலவர் ஸ்ரீவன்மீகநாதர் சன்னதி எதிரே வந்தப்பின் 54 அடி உயரம் கொண்ட கொடிமரத்தின் பீடத்தினை சுற்றியுள்ள ஸ்ரீவிநாயகர், ஸ்ரீசுப்பிரமணியர் உள்ளிட்ட சுவாமிகளுக்கு திரவியம், மஞ்சள், பால், சந்தனம் முதலான நறுமண திரவியப் பொருட்களைக்கொண்டு அபிஷேகங்கள் நடைப்பெற்றன. தொடர்ந்து ரிஷபம் படம் வரையப்பட்ட கொடிக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு வேதமந்திரங்கள் முழங்க மேளதாள இசையுடன் பங்குனி உத்திரப் பெருவிழா துவக்கத்தை அறிவிக்கும் வகையில் கொடிமரத்தில் ரிஷப கொடி ஏற்றப்பட்டது.
பின்னர் கொடிமரந்திற்கு சிறப்பு பூஜைகள் நடைப்பெற்றன. இந்த திருவிழாவின் முக்கிய விழாவான வரும் மார்ச் 21ம் தேதி உலக புகழ்பெற்ற ஸ்ரீதியாகராஜ சுவாமி 96 அடி உயரம்கொண்ட ஆழித்தேரில் வீதிகளில் வலம் வரும் ஆழித்தேரோட்ட விழா நடைபெறுகிறது. இதனை தொடர்ந்து மார்ச் 24ம் தேதி பங்குனி உத்திர தீர்த்தவாரியும், மார்ச் 25ம் தேதி பாத தரிசனமும் நடைபெறுகிறது.
இன்று காலை நடைப்பெற்ற கொடியேற்ற விழாவில் விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துக்கொண்டு ஆரூரா தியாகேசா என பக்தி பரவசத்துடன் கோஷமிட்டு தரிசனம் செய்தனர்.
Leave a Comment