கார்த்திகையின் சிறப்புகள்....


வைஷ்ணவக் கோயில்களில், 'பாஞ்சராத்ர தீபம்' என்று கார்த்திகை தீபத் திருவிழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. மூன்று நாட்கள் நடைபெறும் விழாவில், கோயிலுக்கு முன்னே, பனையோலை கொண்டு கூடுகள் அமைக்கப்பட்டு சொக்கப்பனை எரிப்பது வழக்கம்.

ஜோதி வடிவாய் தோன்றிய சொக்கநாதப் பெருமானை நினைவு கூர்ந்தே சிவாலயங்களில் சொக்கப்பனை கொளுத்தப்படுகிறது.

கார்த்திகை பௌர்ணமி விழாவில், ஸ்ரீரங்கத்தில், ஐந்தாவது திருவீதியிலிருந்து ஆள நாடான் திருவீதிக்குச் செல்லும் வழியில்... தெற்கு வாசல் கோபுரம் அருகே பெருமாள் எழுந்தருளுவார். அப்போது அவரது முன்னிலையில், சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி நடைபெறும். பிறகு சந்தன மண்டபத்தில் எழுந்தருளும்போது, பாசுரங்கள் பாடி அரையர் சுவாமிகள் வழிபடுவது வழக்கம். மேலும்... அப்போது, மார்கழி மாதத் திருநாள் விவரத்தை, கடிதமாக எழுதி பெருமாளிடம் சமர்ப்பிப்பார்கள். இதை 'ஸ்ரீமுகம்' என்பர்.

கார்த்திகை மாத அமாவாசை அன்றுதான் திருவிசநல்லூரில்... ஸ்ரீதர ஐயாவாள் திருமடத்தில் உள்ள கிணற்றில் கங்கா தேவி பிரவாகித்தாள். இன்றைக்கும் இந்தக் கிணற்றில் கங்கை பிரவகிப்பதாக நம்பிக்கை. இதில் ஏராளமானோர் நீராடுவர்.

ஈசனின்... ஈசானம், தத்புருஷம், வாமதேவம், அகோரம், சத்யோஜாதம், அதோமுகம் ஆகிய ஆறு திருமுகங்களிலிருந்து உருவான தீப்பொறியிலிருந்து ஆறுமுகக் கடவுள் அவதரித்ததும் கார்த்திகை நாளில்தான்!

சென்னை- திருவொற்றியூர் ஆதிபுரீஸ்வரர் கோயிலில், புற்று வடிவான லிங்கத் திருமேனியில் புனுகுத் தைலம் சார்த்தி கவசம் போட்டிருப்பர். கார்த்திகை பௌர்ணமி துவங்கி மூன்று நாட்கள் மட்டும் இங்கு கவசம் இல்லாத ஈசனை தரிசிக்கலாம்.
தேவர்கள் ஆண்டுதோறும் இந்த நன்னாளில், இறைவனை பூஜிப்பதற்கு வருவதாக ஐதீகம். இதையட்டி சிறப்பு பூஜையும் நடைபெறுகிறது.

திருநெல்வேலி- ஸ்ரீநெல்லையப்பர் கோயிலில், கார்த்திகை தீபத்தன்று 27 நட்சத்திரங்களை மையமாக வைத்து பெரியளவில் தீபாராதனைகள் நடை பெறும். இதை மடக்கு தீபாராதனை என்பர். இந்தத் தலத்தில், அனைத்து நாளிலும் பிரசாதமாக நெல்லிக்கனி வழங்குவது விசேஷம்.

குருவாயூரப்பன் கோயிலில், கார்த்திகை மாத சுக்லபட்ச ஏகாதசியை ஒட்டி நடத்தப்படும் உற்சவம் தனிச் சிறப்பு வாய்ந்தது. அந்த நாளில், காசி, பத்ரி, சபரிகிரி ஆகிய திருத்தலங்களின் புண்ணிய தீர்த்தங்களின் மகிமையும், கங்கை, யமுனை உள்ளிட்ட நதிகளும் குருவாயூரில் ஒருங்கே கூடுவதாக ஐதீகம்!



Leave a Comment