வரம் தரும் கார்த்திகை....
மகாவிஷ்ணு, பிரம்மா இருவருக்கும் ஜோதிப் பிழம்பாய், சிவபெருமான் காட்சி அளித்த நாள் _ கார்த்திகை பௌர்ணமி!
கடும் தவம் மேற்கொண்ட அன்னை பார்வதிதேவி, கார்த்திகை மாத, கார்த்திகை நட்சத்திரம் கூடிய பௌர்ணமி நாளில்தான் இறைவனது இடப் பாகத்தைப் பெற்றாள். அப்படி, ஈசன் அர்த்தநாரீஸ்வரராக காட்சி தந்த தலம் திருவண்ணாமலை என்கிறது அருணாசல புராணம்.
கார்த்திகை மாத துவாதசி நாளில், துளசிதேவி மகாவிஷ்ணுவைத் திருமணம் செய்து கொண்டதாக ஐதீகம். எனவே, கார்த்திகை மாதம் முழுவதும், துளசி தளங்களால் மகாவிஷ்ணுவை அர்ச்சித்து வழிபட்டு வந்தால், ஒவ்வொரு துளசி தளத்துக்கும் ஒவ்வொரு அஸ்வமேத யாகம் செய்த பலன் உண்டு என்பர். துளசி மாலை அணிபவர்களிடம், மகாலட்சுமி எப்போதும் வாசம் செய்வாள் என்று சாஸ்திரம் அறிவுறுத்துகிறது.
கார்த்திகை மாத துவாதசி நாளில், ஏழைகளுக்கு அன்னதானம் செய்தால், கங்கைக் கரையில் ஆயிரம் பேருக்கு அன்னமிட்ட பலன் கிடைக்கும் என்பர்.
மகாவிஷ்ணுவை கஸ்தூரியால் அலங்கரித்து, தாமரை மலர்களால் அர்ச்சனை செய்து வழிபட்டால் தேவாதிதேவர்களால் பெற முடியாத பாக்கியத்தைக் கூட பெறலாம் என்பர்.
விஷ்ணுவின் சந்நிதிக்கு நேரே அமர்ந்து கொண்டு, பகவத் கீதையின் விபூதி யோகம், பக்தி யோகம், விஸ்வரூப யோகம் ஆகியவற்றை பாராயணம் செய்தால், சகல பாவங்களும் நீங்குவதுடன் புண்ணியங்களும் நம்மை வந்து சேரும்.
நவக்கிரக மூர்த்திகள் விரதம் அனுஷ்டித்து, வரம் பெற்ற கார்த்திகை ஞாயிறு விரதத்தை, முதல் ஞாயிறு தொடங்கி பன்னிரண்டு வாரங்கள் கடைப்பிடித்தால், நவக்கிரகங்களால் ஏற்படும் தோஷங்கள் நீங்கி, சிவசக்தியின் பேரருள் கிடைக்கும் என்பது அடியார்களது நம்பிக்கை.
தன்னைப் பிரிந்த திருமகளுடன் மீண்டும் சேருவதற்காக மகாவிஷ்ணு தவம் மேற்கொண்டு, சிவபெருமானது அருளைப் பெற்ற திருத்தலம் ஸ்ரீவாஞ்சியம். இங்குள்ள குப்த கங்கை தீர்த்தத்தில் நடைபெறும் கார்த்திகை ஞாயிறு நீராடல் உற்ஸவம் மிகவும் பிரசித்தி பெற்றது.
ஆண்டுதோறும் கார்த்திகை மாத ஞாயிற்றுக் கிழமைகளில், அதிகாலை 5:00 முதல் 6:00 மணிக்குள் சிவபெருமானும் பார்வதிதேவியும் அஸ்திர தேவரோடு பிராகார வலம் வந்து, குப்த கங்கையின் கிழக்குக் கரையில் ஆசி வழங்கி அருளுகின்றனர். கார்த்திகை மாதத்தின் ஞாயிற்றுக் கிழமைகளில் இந்த குப்த கங்கையில் நீராடினால் பிரம்மஹத்தி தோஷம், கள் உண்ட பாவம், திருடுவதால் வரும் பாவம் மற்றும் மனச் சஞ்சலத்தால் ஏற்பட்ட பாவங்கள் ஆகியவை நீங்கி விடும் என்று பிரும்மாண்ட புராணம் கூறுகிறது.
கார்த்திகை மாதத்தின் முப்பது நாட்களிலும், அதி காலையில் நீராடி, சிவ- விஷ்ணு பூஜைகள் மற்றும் தீப தானம் செய்து, வீட்டின் எல்லா இடங்களிலும் தீபங்களை வரிசையாக ஏற்றி வைத்து வழிபட்டால், குறைவற்ற மகிழ்ச்சி உண்டாகும் என்று புராணங்கள் விளக்குகின்றன.
Leave a Comment