கடன் பிரச்சினைகள் தீர கணபதியை எப்படி வழிபடுவது?


எப்பேர்ப்பட்ட கடனாக இருந்தாலும் அந்த கடனை தீர்ப்பதற்கு விநாயகப் பெருமானை அருகம்புல்லை வைத்து எப்படி வழிபட வேண்டும். விநாயகப் பெருமானின் 27வது அவதாரம் தான் ருண விமோசன கணபதி. ருணம் என்றால் கடன், விமோசனம் என்றால் விடை பெறுவது, நம்முடைய கடனிலிருந்து விடை பெறச் செய்யக்கூடிய கணபதி என்பதுதான் பொருள்.

பொதுவாக இந்த ருண விமோசன கணபதி என்பவர் அனைத்து ஆலயங்களிலும் இருக்க மாட்டார். இந்த கணபதியிடம் சென்று தான் இந்த வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும் என்ற கட்டாயமும் இல்லை. நம் வீட்டில் இருக்கக்கூடிய விநாயகரை வழிபடலாம் அல்லது அருகில் இருக்கும் விநாயகர் ஆலயத்திற்கு சென்றும் இந்த வழிபாட்டை மேற்கொள்ளலாம். இந்த வழிபாட்டை நல்ல நாளாக பார்த்து ஆரம்பித்துக் கொள்ளுங்கள். ஆரம்பிக்கும் நாள் சதுர்த்தியாக இருந்தால் மிகவும் விஷேசமாக இருக்கும்.

எந்த நாளில் இந்த வழிபாட்டை நாம் தொடங்குகிறோமோ அதற்கு முந்தைய நாள் இரவு தயிரில் 16 அருகம்புல்லை போட்டு ஊற வைக்க வேண்டும். அருகம்புல்லின் நுனி உடையாமல் இருக்க வேண்டும். குறைந்தது மூன்று இலைகளாவது இருக்க வேண்டும். அப்படி பார்த்து தான் பறிக்க வேண்டும். மறுநாள் காலையில் எழுந்து குளித்து முடித்துவிட்டு பூஜை அறையில் விளக்கேற்றிக் கொள்ளுங்கள். தயிரில் ஊற வைத்திருந்த அருகம்புல்லை எடுத்து சுத்தமான தண்ணீரில் கழுவி விட்டு காய்ச்சாத பசும்பாலில் 10 நிமிடம் அந்த அருகம்புல்லை ஊற வைக்க வேண்டும்.

பிறகு அதை அப்படியே எடுத்து வந்து பூஜையறையில் இருக்கும் விநாயகப் பெருமானுக்கு “ஓம் ருண விமோசன கணபதியே போற்றி” என்று கூறி ஒவ்வொரு அருகம்புல்லாக அர்ச்சனை செய்ய வேண்டும். ஆலயத்திற்கு சென்று வழிபடுபவர்களாக இருந்தால் மூன்று முறை விநாயகப் பெருமானை வலம் வந்த பிறகு இந்த அர்ச்சனையை செய்ய வேண்டும்.

இப்படி தொடர்ந்து 27 நாட்கள் செய்ய வேண்டும். நிறைவு செய்யும் நாளன்று விநாயகப் பெருமானுக்கு பிடித்தமான பொருட்களை நெய்வேத்தியமாக வைத்து வழிபட வேண்டும்.



Leave a Comment