ஆருத்ரா தரிசன விழாவில் நடராஜர் கோபுர தரிசனம்...
காரைக்கால் அடுத்த திருநள்ளாறிலுள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீதர்ப்பாரண்யேஸ்வர சுவாமி தேவஸ்தானத்தில் ஆருத்ரா தரிசன விழாவில் நடராஜர் கோபுர தரிசனம் அருளினார். இதில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம்.
புதுச்சேரி மாநிலம் காரைக்கால் அடுத்த திருநள்ளாறில் அமைந்துள்ள உலக பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ தர்ப்பாரண்யேஸ்வர சுவாமி தேவஸ்தானத்தில் ஆண்டு தோறும் ஆருத்ரா உற்சவம் மிகச் சிறப்பாக நடைபெற்று வருகிறது. அதைப்போல் இந்த ஆண்டு ஆருத்ரா உற்சவத்தை முன்னிட்டு 10 நாட்களும் தினமும் திருவெம்பாவையின் 21 பாடல்களையும் பாடி சிவனுக்கு வழிபாடு நடைபெற்றது.
சிவன், அம்பாள் பொன்னூஞ்சல் உற்சவம் நேற்று இரவு மிக விமரிசையாக நடைபெற்றது. ஆருத்ரா உற்சவத்தை முன்னிட்டு சிவன்,அம்பாள் மற்றும் மாணிக்கவாசகருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இன்று காலை ஸ்ரீநடராஜர் மற்றும் ஸ்ரீசிவகாமி தாயாருக்கும் மகா அபிஷேகம் நடைபெற்றது. இன்று பிற்பகல் ஸ்ரீநடராஜர் ஆருத்ரா கோபுர தரிசனம் நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெற்றது. முன்னதாக கோ பூஜையும் விமரிசையாக நடைபெற்றது.
தொடர்ந்து ஸ்ரீநடராஜர்,ஸ்ரீசிவகாமி அம்பாள் சமேதராக எழுந்தருளி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். விழாவில் தருமபுர ஆதீன கட்டளை விசாரணை ஸ்ரீலஸ்ரீ கந்தசாமி தம்பிரான் சுவாமிகள்,ஆலய நிர்வாக அதிகாரி அருணகிரிநாதர் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
Leave a Comment