மார்கழியில் பக்தி மார்க்கத்தில் உய்ய வைக்கும் திருப்பாவை - திருவெம்பாவை !!!


திருப்பாவை...


இந்தப் பூவுலகத்தாரை, பக்தி மார்க்கத்தில் உய்ய வைக்க ஸ்ரீபூமாதேவியின் அம்சமாக பூமியில் அவதரித்தவர் ஸ்ரீஆண்டாள். ஸ்ரீவில்லிப்புத்தூர் எனும் திவ்யதேசத்தில் 'பெரியாழ்வார்' என்றழைக்கப்படும் 'ஸ்ரீவிஷ்ணுசித்தரின்' வளர்ப்பு மகளாக, நந்தவனத்திலே... துளசிச் செடிகளின் மத்தியில், அவதரித்தவர்.

மாலவனின் மீது மாளாத அன்பும் பக்தியும் கொண்டு பூமாலையோடு பாமாலையும் தொடுத்து மூடி, மாலவனுடன் இரண்டறக கலந்தவர். எனவே இறைவனையே ஆட்கொண்டதால் 'ஆண்டாள்' எனவும், கோதை நாச்சியார் என்றும் சூடிக்கொடுத்த நாச்சியார் என்றும் பெயர் பெற்றவர்.

நாலாயிரத் திவ்யப்பிரபந்தம் இயற்றிய பன்னிரெண்டு ஆழ்வார்களுள் ஒரே பெண் ஆழ்வார் ஆண்டாள்தான். ஸ்ரீமகாவிஷ்ணுவின் மீது ஆண்டாள் இயற்றிய பாடல்கள் 143 ஆகும். 'நாச்சியார் திருமொழி' என்கிற தலைப்பில் ஆண்டாள் அருளிச்செய்த பாடல்களின் ஒரு பகுதியே 'திருப்பாவை'.

திருப்பாவை முப்பது பாசுரங்களைக் கொண்டது. மார்கழி மாதத்தில் அதிகாலையில் ஸ்ரீமாலவனை தரிசிக்கச் செல்லும் 'ஆண்டாள்', அதிகாலை வேளையில் உறங்கிக் கொண்டிருக்கும் தம் தோழியரை எழுப்பி அவர்களுக்கும் அந்த பேறு கிடைக்க வேண்டும் என்பதற்காக அவர்களை துயில் எழுப்புவது போல் மாலவனின் பெருமைகளைக் கூறுவது போல், ஆண்டாள் உருகி உருகிப் பாடினாள். அதுவே திருப்பாவை!

'திருப்பாவை' இவ்வுலக சுகபோகங்களில் தம்மை மறந்து மாயை எனும் மயக்கத்தில் உழலும் இவ்வுலக மாந்தர்களை விடுவித்து, இறைவன் திருவடியில் சேர்ப்பதற்கான முயற்சியாக தூக்கத்தில் இருந்து துயில் எழுப்பது என்பதன் உட்கருத்து!.

அதே வேளை, மார்கழி மாதங்களில் விடியற்காலைப் பொழுதில் வீசும் காற்றில் பிராணவாயு அதிகமாக உள்ளது. இது அறிவியல் பூர்வமாக கண்டறியப்பட்ட உண்மை. எனவே உடலும் உயிரும் ஆன்ம நலத்துடன் வாழ வேண்டி திருப்பாவை நோன்பு நோற்போம். ஸ்ரீஆண்டாளின் திருவாக்குப்படி என்றும் வளமோடு வாழ்வோம்!

திருவெம்பாவை
மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை, பல நூற்றாண்டுகளாக, மார்கழி மாதத்தில், இந்துக்களால் பாடப்பட்டு வருகின்றன. கன்னிப் பெண்கள் ஒருவரை மற்றொருவர் துயிலெழுப்பி, அனைவரும் ஒருங்கு சேர்ந்து நீர்நிலைகளுக்குச் சென்று கூட்டமாக நீராடியவாறு தாங்கள் வழிபட்டு வந்த பாவைத் தெய்வத்திடம், தங்களது வாழ்வு வளமாக இருக்க வேண்டும் என்றும் தங்களுக்கு கண் நிறைந்த கணவன் வேண்டும் என்றும் வேண்டியபடி பாடுவதாக அமைந்த பாடல்கள் இவை.

திருவெம்பாவை மொத்தம் இருபது பாடல்கள் கொண்டவை. முதல் எட்டு பாடல்கள் மகளிர்கள் ஒருவரை ஒருவர் எழுப்பிக் கொண்டு எல்லோருமாக இறைவனின் புகழினை பாடியவாறு நீராடச் செல்லுதலையும், ஒன்பதாவது பாடலில் தங்களது வேண்டுகோளை இறைவனிடம் வைப்பதையும், பத்தாவது பாடலில் இறைவனைப் புகழ்ந்து பாடும் தன்மையை கேட்டு அறிவதையும் உணர்த்துகின்றன. அடுத்த பத்து பாடல்கள் அனைவரும் சேர்ந்து நீராடுதலை உணர்த்துவதாகவும் அமைந்துள்ள பாடல்கள்.

திருவெம்பாவையின் இருபது பாடல்களுடன் திருப்பள்ளியெழுச்சி பதிகத்தின் பத்து பாடல்களையும், மார்கழி மாதத்தில் பாடுவது மரபு. சிறு பெண்களுக்கு இடையில் நடைபெறும் உரையாடலாக பல பாடல்கள் அமைந்துள்ளதையும், ஒத்த வயதினர் பேசும்போது அவர்களுக்குள்ளே எழும் கேலியும் பரிகாசமும் ஆங்காங்கே தொனிப்பதையும் நாம் உணரலாம்.



Leave a Comment