மார்கழி மாத விரதங்கள் மற்றும் விழாக்கள்...


பௌர்ணமி விரதம்
மிகவும் சிறப்பு வாய்ந்தது மார்கழி மாத பௌர்ணமி விரதம். மார்கழி பௌர்ணமியன்று சிவபெருமானை வழிபட அனைத்து நன்மைகளும் கிடைக்கும்.  

ஆருத்ரா தரிசனம்
மார்கழி மாதத்தில் வரும் திருவாதிரை நட்சத்திரம் சிவபெருமானுக்குரியது. சிதம்பரத்தில் இந்தத் திருவிழா மிகச் சிறப்பாக நடைபெறும். இந்த நாளில் சிவபெருமான் ஆடல் கோலத்தில் நடராஜப் பெருமானாக ஆருத்ரா தரிசனம் தருகிறார்.

வைகுண்ட ஏகாதசி
வைகுண்ட ஏகாதசி விரதம் மேற்கொள்வதன் மூலமாக தீராத நோய்கள் அகலும், சகல செல்வங்களும் உண்டாகும். முக்திக்கான வழியை அடைவார்கள். வருடம் முழுவதும் ஏகாதசி விரதத்தை கடைபிடிக்க இயலாதவர்கள், மார்கழி மாதம் வரும் வைகுண்ட ஏகாதசியில் மட்டுமாவது விரதம் இருப்பது சிறப்பான பலனை தரும். மூன்றுகோடி ஏகாதசிகளில் விரதமிருந்த பலனை தர கூடியது என்பதால் இது ‘முக்கோடி ஏகாதசி’ எனவும் அழைக்கப்படுகிறது.

பரசுராம ஜயந்தி
தசாவதாரங்களில் ஆறாவது அவதாரம் பரசுராமர் அவதாரம். பரசுராமர் அவதரித்த தினத்தில் பரசுராமரையோ அல்லது மகா விஷ்ணுவையோ வழிபடுவது மிகுந்த நன்மையையும், மனவலிமையையும் அளிக்கும்.

மாதாந்திர சிவராத்திரி
சிவனுக்குரிய விரதங்களில் முதன்மையானது சிவராத்திரி விரதம். இன்று மார்கழி மாத சிவராத்திரி. அன்று விரதமிருந்து சிவபெருமானை வழிபட பிறப்பில்லாப் பேறு கிடைக்கும் என்பது நம்பிக்கை.

அனுமன் ஜயந்தி
இன்று அனுமன் ஜயந்தி தினம். அமாவாசையும் மூல நட்சத்திரமும் கூடிய இந்த நாளில் அனுமனுக்கு வடை மாலை, துளசி மாலை, வெற்றிலை மாலை, வெண்ணெய்க் காப்பு அலங்காரம் செய்தும் வழிபட அனுமனின் பரிபூரண அருள் கிடைக்கும். சத்ரு பயம், கடன் தொல்லைகள் நீங்கும் என்பது நம்பிக்கை.

மார்கழி அமாவாசை
முன்னோர்கள் வழிபாடு செய்வதற்கு உகந்த நாள் இன்று. நீர் நிலைகளில் நீராடி, முன்னோர்களுக்குத் தர்ப்பணம் கொடுத்தால் அவர்களின் ஆசி கிடைக்கும்.

கூடார வல்லி
சூடிக் கொடுத்த சுடர்க் கொடியாள் ஆண்டாள், தனது 27 - வது பாசுரமான `கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா’ என்ற பாசுரம் பாடிய தினம். ராமானுஜர், ஆண்டாள் வேண்டிக் கொண்டபடி அக்கார அடிசிலும் வெண்ணெய்யையும் அழகருக்குப் படைத்துக் கொண்டாடிய நாள்.  

போகிப் பண்டிகை
மார்கழி மாதத்தின் கடைசி நாளான இன்று போகிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையின் தொடக்கமான போகியன்று காப்புக் கட்டி, தைத் திருநாளை வரவேற்க மக்கள் ஆயத்தமாகும் நாள்.



Leave a Comment