செல்வம் பெருக, தொழில் விருத்தியாக வீரமகா ஆஞ்சநேயர் வழிபாடு
திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் அருகே கொத்தப்புள்ளி கிராமத்தில் உள்ள கதிர்நரசிங்க பெருமாளை வழிபட்டால், ஜாதக ரீதியாக ஏற்படும் சூரியதிசை தோஷங்கள் நீங்கும் என்பது ஐதீகம். ஆலயத்தில் சக்கரத்தாழ்வார் சன்னிதி உள்ளது. சதுரபலகை வடிவ கல்லில் தேவர்களுடன் சக்கரத்தாழ்வார் இருப்பது சிறப்பாகும்.
கோர்ட்டு வழக்கு, வாகனத்தினால் வரும் விபத்து ஆகிய வற்றில் இருந்து பக்தர்களை காப்பாற்றுவதாக பக்தர்கள் நம்புகின்றனர். சக்கரத்தாழ்வார் சன்னிதியின் பின்புறத்தில் நரசிம்மர் உள்ளார். நரசிம்மரை வழிபட்டால் எதிரியின் பலம் குறையும். செல்வம் பெருகும். வெள்ளிக்கிழமை தோறும் மஞ்சள்பொடி, சந்தனம், இளநீர், பால் ஆகியவை மூலம் அபிஷேகம் செய்தால் காரிய தடைகள் அனைத்தும் நீங்கும்.
மூலஸ்தானத்தின் கருவறையில் கமலவல்லி தாயார், லட்சுமி சமேத கதிர்நரசிங்க பெருமாள் நின்ற கோலத்தில் காட்சி அளிக்கிறார். கோவிலுக்கு வரக்கூடிய பக்தர்களை தன்வசப்படுத்தி, அவர்கள் கேட்ட வரங்களை பெருமாள் நிறைவேற்றி கொடுக்கிறார். அக்னி மூலைப் பகுதியில் வீரமகா ஆஞ்சநேயர் இருப்பது இங்குதான். பெருமாளை விட 6 மடங்கு பலம் கொண்டவராக ஆஞ்சநேயர் கருதப்படுகிறார். ஆஞ்சநேயரின் உடல்பகுதி கிழக்கு நோக்கியும், தலை வடக்கு நோக்கியும் உள்ளது.
என்னிடம் வாருங்கள், அனைத்து காரியத்தையும் நான் பார்த்து கொள்கிறேன் என்று சொல்லும் வகையில் வீர நடைபோட்டபடி ஆஞ்ச நேயர் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். சனிக்கிழமை தோறும் 9 வாரங்கள், 9 முறை தொடர்ச்சியாக ஆஞ்சநேயரை சுற்றி வலம் வந்தால், தாங்கள் நினைத்த காரியம் வெற்றி பெறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை ஆகும். திருமணமாகாத பெண்கள், ஆஞ்சநேயர் சன்னிதியில் நெய் விளக்கு ஏற்றி வழிபட்டால் திருமண தடை நீங்கும்.
ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை, வடைமாலை, வெண்ணெய் காப்பு, புஷ்ப அலங்காரம், காய்கறி அலங்காரம், பழவகைகள் அலங்காரம் ஆகியவற்றை நேர்த்திக்கடனாக பக்தர்கள் செலுத்தி வருகின்றனர். வாகனங்களுடன் கூடிய பைரவர் சன்னிதி இங்கு தான் உள்ளது. தொழில் ரீதியாக வேண்டுதல்களை நிறைவேற்ற பக்தர்கள் அதிக அளவில் வருகின்றனர்.
ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை ராகு காலத்திலும், பகல் 10.30 மணி முதல் 12 மணி வரை வெள்ளிக்கிழமை ராகு காலத்திலும் 12 விளக்குகள் ஏற்றி வழிபடுவது சிறப்பு அம்சமாகும். ஒவ்வொரு மாதமும் தேய்பிறை அஷ்டமி நாளில் பைரவருக்கு பூசணிக்காய் படைத்து, தேங்காய் எண்ணெய் ஊற்றி வழிபட்டால், அனைத்து தொழில்களும் சிறந்தோங்கும். வாகன விபத்து, நான்கு கால் ஜீவன்களால் ஏற்படும் ஆபத்து ஆகியவை நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
Leave a Comment